சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு.. மண்டல, மகர பூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திபெற்ற ஐயப்பன் திருக்கோவில். கார்த்திகை மாதம் முதல் நாள் துவங்கிய உடனேயே பக்தர்கள் சபரிமலைக்கு இருந்து சாமி தரிசனம் செய்ய துவங்குவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுகளுக்கான கோவில் நடை இன்று (நவம்பர் 16) மாலை 4 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி திறந்து வைத்து தீபம் ஏற்ற இருக்கிறார். 18 ஆம் படிகள் வழியே ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து திருநீறு பிரசாதமாக வழங்கப்படும்.
சபரிமலை மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகபுரம் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்ட ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் பதவியேற்பு விழாவும் இன்று மாலை நடைபெற இருக்கிறது.
இதனையடுத்து, தந்திரிக்கு அபிஷேகம் நடைபெற இருக்கிறது. பின்னர் நடை சாத்தப்பட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதன்மூலம் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கும்.
ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு சுமார் ஒருலட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று கணிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் முன்பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு உதவும் வகையில் சபரிமலை பாதையில் 13 இடங்களில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை சபரிமலையின் பொன்னம்பலமேட்டில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு சுமார் 13,500 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.