என்.டி.திவாரி மகன் கொலை வழக்கு.. மனைவியே கொன்றது அம்பலம்.. 90 நிமிடங்களில் தடயங்கள் அழிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 24, 2019 06:27 PM

ரோகித் திவாரி வழக்கில் புதிய திருப்பமாக, 90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்ததாக, அவரது மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

rohit shekhar tiwari wife arrested for killing him

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வராக இருந்தவர் என்.டி.திவாரி. இவரது மகன் ரோகித் சேகர் திவாரி, அபூர்வா என்பவரை திருமணம் செய்து கொண்டு டெல்லியில் தனியாக வசித்து வந்தார். தனியாக வசித்து வந்தாலும் கணவன் - மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. எனவே இதன் காரணமாக, ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஏப்ரல் 11-ம் தேதி நடந்த தேர்தலுக்கு வாக்களிக்க உத்தரகாண்ட் சென்றுவிட்டு 15-ம் தேதி மீண்டும் டெல்லி திரும்பியுள்ளார் ரோகித் சேகர். அவர் வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்துள்ளார். பின்னர் மறுநாள் ஏப்ரல் 16-ம் தேதி, ரோஹித்தின் அம்மா உஜ்வாலாவுக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் ரோஹித், மூக்கில் ரத்தம் வடிந்தபடி மயங்கிய நிலையில் உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து ரோகித் சேகரை விரைந்து வந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மனைவியிடம் இது குறித்து கேட்ட போது ரோகித் சேகர் மாரடைப்பால் துடித்ததாகவும் பின்னர் மயங்கி விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரின் வாக்குமூலத்தில் நம்பிக்கை ஏற்படாததால், ரோகித் சேகரின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது

அங்கு நடைபெற்ற பிரேதப் பரிசோதனையின் முடிவில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில் ரோகித்தின் கழுத்து நெரிக்கப்பட்டு, அதனால் தான் அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டது. இதனால் இந்த மரணம் இயற்கையானது அல்ல என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டதால், கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

இதில் ரோகித் சேகரின் மனைவி அபூர்வா மீது சந்தேகம் வலுத்தது. சொத்துக்காக அவர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டிருந்தனர். ரோகித் வீட்டில் இருந்த 7 சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றி காவல்துறையினர் சோதனை செய்தனர். மேலும், அவரின் மனைவி அபூர்வா, அவரது வீட்டில் வேலை செய்த பெண், உறவினர்கள் போன்ற பலரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

இதில் சம்பவம் நடந்த அன்று அபூர்வாவிடமிருந்து ரோகித்துக்கு வீடியோ கால் வந்ததாகவும், ரோகித்தும் அவரின் மனைவியும் நீண்ட நேரம் சண்டை போட்டுக்கொண்டதாகவும் வீட்டு வேலைக்காரப் பெண் போலீஸில் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அபூர்வாவிடம் சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அவர் கூறிய பதில்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளன. இதற்கிடையில் ரோகித் வீட்டில் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் அபூர்வாதான் கொலை செய்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிறகு இதை அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். ரோகித்துடன் தனக்கு நடந்த திருமணத்தில் மகிழ்ச்சியில்லாத காரணத்தினால்தான் கணவரைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'ஏப்ரல் 16-ம் தேதி ரோகித்தின் அறைக்குள் சென்ற அபூர்வா தலையணை வைத்து அழுத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் கொலை செய்த அனைத்து தடயங்களையும் அழித்துள்ளார். இவை அனைத்தையும் 90 நிமிடங்களில் செய்து முடித்துள்ளார். அபூர்வா மீது வழக்கு பதிவு செய்து, தற்போது அவரை கைது செய்துள்ளதாக' போலீஸார் கூறியுள்ளனர்.

Tags : #NDTIWARI #MURDER #ROHITSHEKHAR