அழகிரி மகன் துரை தயாநிதியின் ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 24, 2019 05:44 PM

மக்களவைத் தேர்தல் நெருங்கி வந்த வேளையில் வேலூரில் திமுக வேட்பாளர் மீது பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு வைக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள தொகுதியில மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

Durai Dayanithis 40 cr assets locked by Enforcement Department

இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அடுத்த நாள், தூத்துகுடியில் கனிமொழி தங்கியிருந்த இல்லம் மற்றும் அலுவலகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் அந்த வருமானவரி சோதனை குறித்து பேசிய தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியரின் அலுவகலத்துக்கு வந்த புகாரின் பேரில் அந்த சோதனை நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டது.

ஆனால் அந்த ரெய்டில் எதுவும் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,  திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதிக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை கிரானைட் முறைகேடு விவகாரத்தில் முடக்கியுள்ளது.

கடந்த 2012-ஆம் வருடம் மதுரை கீழவளவில் உள்ள கிரானைட் சுரங்கத்தில் முறைகேடு நடந்ததாக அழகிரியின் மகன் துரை தயாநிதி மற்றும் அவருடைய நண்பர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இந்த புகார்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தன. மேலும், சட்டத்துக்கு புறம்பாக வரம்பு மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக எழுந்த இந்த புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை துரை தயாநிதி மீது வழக்கு பதிவு செய்திருந்தது.

மேலும் அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரித்த பின்னர் தற்போது, துரை தயாநிதியின் 40.3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் துரைதயாநிதி மீதான இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DURAIDAYANITHI