'ஹெச்-1பி விசா'... 'இந்தியர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி'... மோடி, பைடன் சந்திப்பில் நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாஹெச்1பி விசா விவகாரம் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் முன்னாள் அதிபர் டிரம்ப் கொண்டு வந்த ஹெச்-1பி விசா சீர்திருத்தத்தால் பல இந்தியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் ஜோ பைடன் தனது தேர்தல் பரப்புரையில், தான் ஆட்சிக்கு வந்தால் ஹெச்-1பி விசா விவகாரத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பில் ஹெச்-1பி விசா தொடர்பாகப் பல கோரிக்கைகளைப் பிரதமர் முன் வைத்தார்.
அந்த வகையில் ''அமெரிக்காவில் ஹெச்1பி விசா மூலம் பணியாற்றும் இந்தியர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும், சமூகப் பாதுகாப்பிலும் முக்கிய பங்குவகிக்கின்றனர். குறிப்பாக சுமார் 2 லட்சம் மாணவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஆண்டுக்கு 7.7 பில்லியன் டாலர் அளவுக்குப் பங்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐடி துறையைப் பொறுத்தவரை இந்தியர்களின் பங்கு என்பது அபரிவிதமானது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் பணியாளர்களை அமெரிக்காவில் பணியில் அமர்த்த ஹெச்-1பிவிசா முறையையே நம்பியிருக்கிறார்கள். எனவே ஹெச்-1பி விசா கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் பல நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்படும்'' என ஜோ பைடனிடம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.