ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா!?.. இந்தியாவை அதிரவைத்த சர்ச்சை!.. முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கியின் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுக்க பல தொழில் அதிபர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாத நிலையில், ரிசர்வ் வங்கி அவற்றை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர். அந்த வகையில் நாட்டில் இதுபோன்று தொழில் அதிபர்கள் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் இருக்கும் தொகை மட்டும் சுமார் 68 ஆயிரம் கோடி என தகவல் வெளியானது.
மேலும் ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தொகையை தொழில் அதிபர்கள் நீண்ட காலமாக திரும்ப செலுத்தாமல் இருப்பதால், அவற்றை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்துவிட்டதாக செய்திகள் வைரலாகி வருகின்றன. ஆய்வு செய்ததில், ரூ. 68 ஆயிரம் கோடி வாராக்கடன் தொகையை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
உண்மையில் சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
அதன்படி கடந்த 24-ந்தேதி ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்ற விவரத்தையும் தெரிவித்து இருந்தது.
தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையில் உள்ள விவரங்களின் படி நிலுவையில் உள்ள தொகை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை மொத்தம் ரூ. 68 ஆயிரம் கோடி என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுவே கடன் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டதாக பல்வேறு செய்திகளில் குறிப்பிடப்பட்டது.
உண்மையில், இவ்வாறு குறிப்பிடப்படும் வாராக்கடன் தொகை வங்கிகளின் லாப நஷ்ட கணக்கில் சேர்க்கப்படும். இதுதவிர, இந்த தொகையை திரும்ப வசூலிக்கும் முழு உரிமை வங்கிகளுக்கு உண்டு என ரிசர்வ் வங்கி வெளியிட்ட வாராக்கடன் விவரங்கள் அடங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று ரூ. 68 ஆயிரம் கோடி வாராக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படவில்லை என உறுதியாகியுள்ளது.
