வீட்டுக்குள் ரகசிய ‘LAB’.. அதிகாரிகள் நடத்திய ‘அதிரடி’ சோதனை.. ஒரு வருசத்துல மட்டும் ‘100 கிலோ’.. அதிரவைத்த PHD பட்டதாரி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீட்டுக்குள் ரகசிய ஆய்வகம் அமைத்து போதைப்பொருட்களை தயாரித்த பி.ஹெச்டி பட்டதாரியை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசிய ஆய்வகம் அமைத்து போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்வதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு (DRI) ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் ரகசியமாக போதைப்பொருளை தயாரித்துக் கொண்டிருந்த பி.ஹெச்டி பட்டதாரி ஸ்ரீனிவாச ராவ் (45) என்பவரை கைது செய்தனர்.
இதுகுறித்து தெரிவித்த வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், ‘எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சம்பந்தப்பட்ட ஆய்வகத்தில் சோதனை நடத்தினோம். அங்கு ரூ.63.12 லட்சம் மதிப்புள்ள 3.156 கிலோ மெபெட்ரோனை (Mephedrone) பறிமுதல் செய்தோம். போதைப்பொருள் தயாரித்த நபரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரூ .12.40 லட்சம் மற்றும் 112 கிராம் மெபெட்ரோன் மாதிரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் மெபெட்ரோனை உற்பத்தி செய்வதற்காக வாங்கப்பட்ட சுமார் 219.5 கிலோ எடையுள்ள மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை மருந்தை தயாரித்தவர் வேதியியல் பாடத்தில் பி.ஹெச்டி பட்டம் பெற்றவர். அவர் இதற்கு முன் மருந்தியல் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் 100 கிலோ அளவிற்கு மெபெட்ரோனை தயாரித்து விற்பனை செய்துள்ளார். இவருக்கு மூலப்பொருட்களை சப்ளை செய்த 2 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பி.ஹெச்டி பட்டதாரி ஸ்ரீனிவாச ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஹெச்டி பட்டதாரி ரகசியமாக வீட்டுக்குள் போதைப்பொருள் தயாரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
