‘யாருப்பா நீ’.. இவ்ளோ சின்ன வயசுல இப்டியொரு சாதனையா..! திரும்பி பார்க்க வைச்ச சிறுவன்.. குவியும் பாராட்டு..!
முகப்பு > செய்திகள் > இந்தியா14 வயதிலேயே பட்டப்படிப்பை முடித்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அகஸ்திய ஜெய்ஸ்வால் (14), இளம் வயதிலேயே பட்டப்படிப்பை முடித்த இந்தியாவின் முதல் மாணவர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார். இவர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம் பட்டம் முடித்துள்ளார்.
தனது 9 வயதில் 7.5 ஜி.பி.ஏ. உடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் சிறுவன் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார். அதன்பின்னர் 11 வயதில் 12ம் வகுப்பில் 63% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். இதனை அடுத்து ஹைதராபாத்தின் செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பில் இணைந்தார்.
இதுகுறித்து தெரிவித்த அகஸ்திய ஜெய்ஸ்வால், ‘என் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவோடு பல சவால்களை சமாளித்து வருகிறேன். நான் 1.72 வினாடிகளில் A முதல் Z எழுத்துக்களை தட்டச்சு செய்வேன். 100 வரை பெருக்கல் அட்டவணைகளை என்னால் சொல்ல முடியும். இரு கைகளாலும் எழுத முடியும். நான் ஒரு சர்வதேச ஊக்க பேச்சாளர். நான் ஒரு டாக்டராக விரும்புகிறேன். அதனால் அடுத்ததாக மருத்துவம் படிக்க உள்ளேன்’ என அவர் உற்சாகமாக தெரிவித்தார்.
இதுகுறித்து தெரிவித்த அவரது தந்தை அஸ்வினி குமார் ஜெய்ஸ்வால், ‘ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறப்புத் தரம் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தினால், ஒவ்வொரு குழந்தையும் வரலாற்றை உருவாக்க முடியும்’ என தெரிவித்தார்.
மகன் பற்றி கூறிய தாய் பாக்யலட்சுமி, ‘நாங்கள் எப்போதும் அவனிடம் பாடங்களைப் புரிந்து கொள்ளும்படி கூறுவோம். அவன் எப்போதும் எங்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பான். அதற்கு நாங்கள் பிராக்டிக்கலாக அவனுக்கு பதிலளிப்போம்’ என்று கூறினார். இந்தநிலையில் மிக குறைந்த வயதில் பட்டம் பெற்ற அகஸ்திய ஜெய்ஸ்வாலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.