'புயலை விட மோசமாக மும்பை.. பெங்களூரு என இப்போது கேரளா வரை டிராவல் ஆகும் போதைப்பொருள் சப்ளை விவகாரம்!'.. அதிர்ச்சி தரும் உண்மைகள்.. அடுத்து நடக்கவுள்ள திருப்பங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபோதைமருந்து கடத்தல் விவகாரத்தில் கைதான அனூப் என்பவர், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறியின் பினாமியாக செயல்பட்டுள்ளது அமலாக்கப் பிரிவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுஷாந்த் சிங் மரண வழக்கை விசாரிக்கப் போய், மும்பையில் தொடங்கிய போதைப்பொருள் வழக்கு, அப்படியே பெங்களூருவுக்கு வர, கடந்த இரு மாதங்களுக்கு முன் நடிகைகளும், தொடர்ந்து போதைமருந்து கடத்தியதாக அனூப், அனிகா, ரவிந்திரன் உள்ளிட்டோரும் தேசிய போதைமருந்து தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 145 எம்எம்டிஏ போதை மாத்திரைகளும், ரூ.2.20 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட, விசாரணையில், இந்தக் கும்பலுக்குத் தேவையான நிதியுதவியை பினீஷ் கொடியேறி செய்து வந்தது தெரியவர, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கடந்த மாதம் 9-ம் தேதி பினீஷ் கொடியேறியிடம் விசாரணை நடத்திய நிலையில், நேற்றும் அவரை விசாரணைக்காக பெங்களூரு அழைத்திருந்தனர்.
இதில் போதைமருந்து கும்பலுடன் பினீஷ் கொடியேறி சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்திருப்பது உறுதியானதால், அவரை கைது செய்தி நீதிமன்ற காவலில் அமலாக்க பிரிவினர் வைத்துள்ளனர். அத்துடன் பினீஷ் கொடியேறி மற்றும் அனூப் இருவரும் தங்களுக்கிடையே பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம், பெரிய அளவில் கணக்கில் வராத பணத்தை பரிமாற்றம் செய்ததும், பினீஷ் கொடியேறியின் நிதி தொடர்பானவற்றுக்கு பினாமியாக அனூப் இருந்ததும் தெரியவந்தது. இதனிடையே இந்த விவகாரத்தில் இன்னும் கர்நாடக மாநிலத்தின் சில முக்கிய நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்களும் சிக்குவார்கள் என போதைமருந்து தடுப்புப் பிரிவினர் தரப்பில் கூறப்படுகிறது.