'நண்பா நாங்களும் உங்க ரத்த சொந்தம் தான்'... 'நாங்க இருக்கோம்'... 'ட்விட்டரில் வைரலாகும் ஹேஷ்டேக்'... நெகிழ வைத்த பாகிஸ்தான் நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎவ்வளவோ கருத்து வேறுபாடுகள், எல்லையில் பிரச்சனை என்றாலும் இந்தியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றதும் முன்னால் வந்து நின்றுள்ளார்கள் பாகிஸ்தானியர்கள்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த வருடத்திலிருந்த பாதிப்பை விட இந்த முறை அதன் தீவிரம் அதிகமாகவே உள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது. மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர், சமீப நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவின் வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவிற்கு ஆதரவாக இருக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டு இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் தன்னால் முடிந்த உதவிகளை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என ட்விட்டரில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதன் காரணமாகப் பாகிஸ்தானில் #indianeedsoxigen என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாகிஸ்தானில் செயல்படும் அப்துல் சத்தார் தன்னார்வ அமைப்பு மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயார் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது.
நாங்கள் உங்கள் ரத்த சொந்தங்கள் தான், உங்களுடன் நாங்கள் எப்போதும் துணையாக இருப்போம் என பல பாகிஸ்தான் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.