"இதெல்லாம் எங்க வியூவர்ஸ் ஏத்துக்க மாட்டாங்க!".. 'அர்னாப் கோஸ்வாமியின் விவாத நிகழ்ச்சியால்' 20,000 பவுண்டுகள் அபராதம் விதித்த பிரிட்டன் ஒளிபரப்பு ஒழுங்குத்துறை!
முகப்பு > செய்திகள் > இந்தியா2019, செப்டம்பர் 6-ஆம் தேதி யுனைடெட் கிங்டமில் ரிபப்ளிக் பாரத் சேனலில் ஒளிபரப்பான Poochta Hai Bharat நிகழ்ச்சி, ஒளிபரப்பு விதிமுறைகளை மீறியதாக அர்னாப் கோஸ்வாமியின் அந்த நிகழ்ச்சிக்கு யுனைடெட் கிங்டம் கட்டுப்பாட்டாளர்கள் குழு கண்டறிந்து அபராதம் விதித்திருக்கின்றன.
அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி குறித்து பல்வேறு சர்ச்சைகள் அண்மையில் எழுந்துவரும் நிலையில், டி.ஆர்.பி. வழக்கில் ரிபப்ளிக் டிவி மற்றும் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறது.
இதனிடையே ரிபப்ளிக் டிவியின் ஹிந்தி மொழி செய்தி சேனல் பிரிவான Republic Bharat சேனலுக்கு இங்கிலாந்தின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் 20,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 19.73 லட்சம்) அபராதம் போட்டுள்ளது.
மதம், தனிமனிதர்கள், சமூகக் கட்டமைப்புகளை இழிவுபடுத்துவதாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொது மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் ரிபப்ளிக் பாரத் சேனலின் ஒளிபரப்பு உரிமத்தை வைத்திருக்கும் வேர்ல்டுவியூ மீடியா நெட்வொர்க் லிமிடெட் (Worldview Media Network limited) மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் விருந்தினர்களும், தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமியும், பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தானிய மக்களை பயங்கரவாதிகள் என்றும் கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்திருக்கிறது. இதனால் பிரிட்டனின் செய்தி மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையமான ofcom பாகிஸ்தான் மக்கள் மீதான சகிப்பின்மையை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியதுடன் நிகழ்ச்சி விவாதத்தில் பயன்படுத்தப்பட்ட Pakki என்கிற வார்த்தை ஒரு இனவெறி வார்த்தை என்றும், இதனை இங்கிலாந்து பார்வையாளர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனை அடுத்து பிரிட்டன் அரசின் ஒளிபரப்பு ஒழுங்குத்துறை, பிரிட்டனில் ரிபப்ளிக் டி.வி நிகழ்வுகளை ஒளிபரப்பும் வேர்ல்ட்வியூ மீடியா நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்துக்கு 20 ஆயிரம் பவுண்டுகள் அபராதமாக விதித்திருக்கிறது.