‘ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி’... ‘அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம் தான்’... ‘இந்த நாட்டுக்கு மாற்றப்பட வாய்ப்பு’... ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு‘அடுத்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படலாம்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில் நடைபெற இருந்த ஐசிசி டி20 போட்டி கொரோனா பரவல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2021) அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்றும், அதன்பிறகு 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம் தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ‘யூடியூப்’ சேனலுக்கு அளித்த பேட்டி அளித்துள்ளார்.
அதில், ‘2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதில் இன்னும் சில நிலையற்ற தன்மை நிலவுகிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்தியாவில் இன்னும் கொரோனா பரவல் இருக்கிறது. எனவே இந்த போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் தெளிவான முடிவு வருகிற ஏப்ரல் மாதத்தில் தான் தெரியவரும்.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு சீராக இல்லாததால், 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியினருக்கு விசா வழங்குவது குறித்து ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தால் நன்றாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே இரு நாட்டு தொடர் நடத்துவதற்குரிய சூழ்நிலை ஏற்றதாக இல்லை. இதனால் தான் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான உத்தரவாதத்தை கேட்கிறோம்’ என்று அவர் கூறினார்.

மற்ற செய்திகள்
