மனைவி மற்றும் மருமகளை கொலை செய்தது குறித்து முதியவர் சொன்ன காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள ஷேரே பஞ்சாப் காலனியை சேர்ந்தவர் புருஷோத்தம் சிங் காந்தோக் (வயது 89). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு 81 வயதில் ஜாஸ்பீர் கவுர் என்ற மனைவியும், 66 வயதில் கமல்ஜித் கவுர் என்ற மருமகளும் இருந்தனர்.
மனைவி-மருமகள்
புருஷோத்தம் சிங்கின் மனைவி நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது மருமகள் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது மூத்த மகள் குர்பீந்தர் கவுர். இவர்கள் புருஷோத்தம் சிங்தான் கவனித்து வந்துள்ளார். படுத்த படுக்கையாக இருவருக்கும் தேவையான பணிவிடைகளையும் புருஷோத்தம்தான் செய்து வந்துள்ளார்.
கொலை
இந்த நிலையில் புருஷோத்தம் சிங் முதியவர் என்பதால், வயது மூப்பு காரணமாக அவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டது. இதனால் தொடர்ந்து அவர்களை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து இருவரையும் கொலை செய்து விடலாம் என முடிவு செய்துள்ளார். உடனே சமையலறையில் இருந்த கத்தியை கொண்டு இருவரின் கழுத்தையும் அறுத்து கொலை செய்துள்ளார்.
கைது செய்த போலீசார்
இதனை அடுத்து அதே பகுதியில் வசித்து வரும் தனது மூத்த மகள் குர்பீந்தருக்கு போன் செய்து கொலை செய்த விவரத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். உள்ளே சென்று பார்த்த போது மனைவியும், மருமகளும் சடலமாக கிடந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் புருஷோத்தம் சிங்கை கைது செய்தனர்.
அதிர்ச்சி வாக்குமூலம்
இதனைத் தொடர்ந்து புருஷோத்தம் சிங்கிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த மேக்வாடி காவல் நிலைய ஆய்வாளர் சஞ்சீவ் பிம்பிள், ‘புருஷோத்தம் சிங்கை கைது செய்து 3 நாள் போலீஸ் காவலில் வைத்து, விசாரணை நடத்தினோம். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தான் இறந்த பிறகு மனைவி மற்றும் மருமகளுக்கு என்ன நடக்கும் என்ற கவலையில் அவர்களை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார்’ என அவர் தெரிவித்துள்ளார். முதியவர் ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.