"என்ன வந்தாலும் அவன் கூட தான் இருப்போம்".. தன்பாலின ஈர்ப்பாளராக மாறிய மகன்.. பேரணியில் கலந்து கொண்ட தாய்
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியை சேர்ந்தவர் யாஷ். 24 வயதாகும் இவருக்கு தன்பாலின ஈர்ப்பு இருந்து வந்ததாக தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி யாஷ் உணர்ந்த நிலையில், பெற்றோரிடம் தெரிவிக்கவும் அவர் முடிவு செய்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, உறவினர் ஒருவர் மூலம் யாஷின் பெற்றோருக்கு இந்த விவரம் தெரிய வர, ஒரு நிமிடம் மகனை நினைத்து அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
இந்த நிலையில், மகனின் விருப்பத்தை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு எதிராகவும் ஆரம்பத்தில் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
யாஷின் தாயாரான மீனாட்சி மகனின் நிலையை நினைத்து அடிக்கடி கண்ணீர் வடிக்கவும் செய்துள்ளார். மேலும் தான் செய்த பாவத்தினால் தான் மகன் இப்படி மாறியதாகவும் கருதி வருந்தி வந்துள்ளார். அப்படி ஒரு சூழலில் மெல்ல மெல்ல மகன் யாஷ் குறித்தும் அறிய முற்பட்டுள்ளனர் அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர்.
இதனைத் தொடர்ந்து, தனது உணர்வு குறித்து திரைப்படங்கள் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் அவரது பெற்றோருக்கு யாஷ் உணர வைத்ததாகவும் அவர்களும் மெல்ல மெல்ல மகனின் நிலையை அறிந்து கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் டெல்லியில் வைத்து தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணி நடைபெற்றிருந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கெடுத்திருந்த நிலையில், யாஷும் அதில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஆதரவாக அவரது தாயார் மீனாட்சியும் கலந்து கொண்டிருந்தார். இது அங்கே கலந்து கொண்டிருந்த பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. அதுவும் தனது மகனுக்கு ஆதரவான வாசங்களையும் மீனாட்சி கொண்டு வந்து பேரணியில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது.
இது பற்றி பேசும் மீனாட்சி, அவர்களின் வேதனையை உணர முடிவதாகவும், வெளியே சிரித்துக் கொண்டே இருந்தாலும் குடும்பத்தினர் ஆதரவு இல்லாமல் அவர்கள் உள்ளே வருந்தி கொண்டிருப்பார்கள் என்றும் கூறினார். அதே போல, பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறும் நிலை வரும் என்றும் குறிப்பிட்ட யாஷின் தாயார் மீனாட்சி, தங்களின் பிள்ளைகள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணியில் தனது மகனுக்காக தாய் ஒருவர் கலந்து கொண்ட புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.