"சிக்கன் சமைக்க மாட்டியா நீ".. கணவன் மனைவி இடையே வந்த தகராறு.. விலக்கிவிட போன பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட சோகம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசம் மாநிலத்தில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறை விலக்கச் சென்ற அண்டை வீட்டார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் மாவட்டத்தில் உள்ளது சவாணி பாதர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பப்பு அஹிர்வார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது மனைவியிடம் சிக்கன் சமைக்க சொல்லியிருக்கிறார். அப்போது, அந்த பெண்மணி மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் எழுந்த சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்திருக்கின்றனர்.
அப்போது, பப்பு தனது மனைவியை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே பப்புவின் அண்டை வீட்டில் வசித்துவந்த பப்லூ அஹிர்வார் என்பவர் ஓடிச்சென்று பப்புவை விலக்கி இருக்கிறார். இதனையடுத்து அங்கிருந்து சென்ற, பப்பு சிறிது நேரத்தில் தனது உறவினர் ஒருவருடன் பப்லூ அஹிர்வாரின் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அவருடன் வாக்குவாதத்தில் பப்பு ஈடுபட்டதாக தெரிகிறது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் எல்லை மீறி சென்றிருக்கிறது. அப்போது பப்லூவை, பப்பு தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த பப்லூ, அருகில் உள்ள ஹமீதியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னரே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே, பப்பு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பப்புவை பிடிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பப்புவை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அவரிடத்தில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய போபால் தேஹாத் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) கிரண் லதா கர்கேடா," செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் சிக்கன் சமைப்பது குறித்து மனைவியிடம் சண்டையிட்டிருக்கிறார் பப்பு. அப்போது, பப்லூ இருவரையும் விலக்க முயன்றிருக்கிறார். அதனால் பப்லூவை தாக்கியுள்ளார் பப்பு. இதனிடையே காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பப்லூ மரணமடைந்திருக்கிறார். தலைமறைவாக இருந்த பப்பு தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார். இது அம்மாநிலம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.