கவர்னர் விசிட்.. மதியம் எங்க வீட்ல தான் சாப்பாடு.. ஆனா இப்போ வந்த பில் 14,000.. அதிர்ச்சி சம்பவம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ஒருவருக்கு புது வீடு கிடைத்த நிலையில், அதன் பிறகு அவருக்கு வந்த பில் ஒன்றை பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.
இந்தியாவில், பிரதமர் நரேந்திர் மோடியின் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், வீடு இல்லாத ஏழைகளுக்கு மத்திய அரசு செலவில் வீடு கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில், ஒரு குடிசையில் வாழ்ந்து வந்துள்ளார் புத்ராம் ஆதிவாசி. இவருக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், சிமெண்ட் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. புத்ராமின் புதிய வீட்டிற்கான சாவியை அம்மாநில ஆளுநர் மங்குபாய் சி படேல் நேரில் வந்து வழங்கினார்.
அது மட்டுமில்லாமல், கிரஹ பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர், அதே வீட்டில் அமர்ந்து மத்திய உணவும் அருந்தி விட்டுச் சென்றார். ஆளுநர் வந்து, தங்களது கிரஹ பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மதிய உணவும் அருந்திச் சென்றதால், மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர் புத்ராம் ஆதிவாசியின் குடும்பத்தினர். அது மட்டுமில்லாமல், இது தொடர்பான புகைப்படங்களும், இணையத்தில் அதிகம் வைரலாகி, ஆளுநரைப் பற்றிய பேச்சு தான் சில நாடுகளுக்கு வைரலாக இருந்தது.
14,000 ரூபாய் பில்
முன்னதாக,புத்ராம் வீட்டிற்கு ஆளுநர் வருவதற்கு முன்பாகவே, அக்கிராமத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர், அந்த வீட்டிற்கு புதிய ஆடம்பர கேட் மற்றும் ஃபேன் ஆகியவற்றை பொறுத்தியுள்ளனர். புதிய வீடுதான் இது போன்ற பொருட்களும் கிடைத்ததால் இன்னும் மகிழ்ச்சி அடைந்த புத்ராம். ஆனால், ஆளுநர் வீட்டிற்கு வந்து கிளம்பிய பிறகு, கேட் மற்றும் ஃபேன் ஆகிய இரண்டிற்கும் சேர்த்து, 14,000 ரூபாய் பில்லை புத்ராமிடம் கிராம அதிகாரிகள் நீட்டியுள்ளனர்.
அதிர்ச்சி
ஆளுநர் வந்ததால், மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போயிருந்த புத்ராம், இந்த பில்லைக் கண்டதும் பதறிப் போயுள்ளார். 'அதிகாரிகள் எங்களிடத்தில் வந்து, ஆளுநர் இங்கு வந்து உணவு அருந்துவார் என்று கூறினார். மேலும், 14,000 ரூபாய் மதிப்பிலான கேட் பொருத்தப்பட்டது. ஆனால், இப்போது அதற்கான பணத்தை கேட்கிறார்கள். இப்போது என்னிடம் பணம் இல்லை. முன்னரே தெரிவித்திருந்தால், நான் இந்த கேட்டை வைக்க வேண்டாம் என கூறியிருப்பேன்' என தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை
மேலும், புத்ராமின் வீட்டிற்கு புதிய சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமையல் எரிவாயு இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில், இதுபற்றி பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பூபேந்திர சிங், 'நிச்சயம் இப்படி நடந்திருக்கக் கூடாது. இந்த சம்பவம் ஆளுநரின் கண்ணியத்திற்கு எதிரானது. இது சம்மந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டிற்கு விருந்தினர் வந்தால், வீட்டை நாங்கள் அலங்கரிப்பது வழக்கம். அப்படி தான், கவர்னர் அங்கு செல்வதற்கு முன் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதற்காக ஏழையிடம் பணம் கேட்பது தவறு' என தெரிவித்துள்ளார்.
அநீதி இழைக்கப்பட்டுள்ளது
மேலும், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ குணால் சவுத்ரி, 'கவர்னர் வந்து சென்ற பிறகு, 14,000 பில்லை ஏழை குடும்பத்தினரிடம் அளித்துள்ளனர். அவர்களிடம் இருந்து பணம் கொள்ளை அடிப்பதை நிறுத்த வேண்டும். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக எப். ஐ. ஆர் பதிவு செய்யபட வேண்டும்' என தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.