'இது கோகோ!.. இல்ல இல்ல... இது என்னோட டைகர்'!.. போலீசிடம் மல்லுக்கட்டிய 2 பேர்!.. ஒரிஜினல் ஓனர் யார்?.. 3 வயது நாய்க்கு டிஎன்ஏ சோதனை!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் உரிமையாளர் இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க 3 வயது லாப்ரடோர் நாய் டி.என்.ஏ (மரபணு) சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விநோத சம்பவம் நடந்துள்ளது.

குடும்பங்கள் இடையே சொத்து பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக பல இடங்களில் நாம் பார்க்கக்கூடியது தான். ஏன் குழந்தைகளுக்காகக் கூட பிரச்சினை ஏற்படக்கூடும். ஆனால் மத்திய பிரதேசத்தில் ஒரு நாய்க்காக இரு குடும்பங்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஹொசங்காபாத் பகுதியை சேர்ந்தவர் பத்திரிகையாளர் சதாப் கான். இவர் லாப்ரடோர் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். அதற்கு அவர் கோகோ என பெயரிட்டு அழைத்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோகோ காணாமல் போய்விட்டது. இதையடுத்து அவர் நாயை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், தானும் பல இடங்களில் தேடி வந்தார்.
சிவ்ஹரி என்பவரது வீட்டில் தனது நாய் இருப்பதாக கேள்விப்பட்டு அவரது வீட்டிற்கு சென்று சதாப் பார்த்தார். கோகோ போலவே அங்கு ஒரு நாய் இருந்தது. இதையடுத்து அவர் அந்த நாயை தன்னிடம் ஒப்படைக்கும்படி சிவ்ஹரியிடம் முறையிட்டார்.
ஆனால் சிவ்ஹரியோ இந்த நாய் தங்களுடையது என்றும், அந்த நாயின் பெயர் டைகர் என்றும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சதாப் காவல் நிலையத்தில் சென்று, தனது நாய்க்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து அந்த நாயை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்த போலீசார், அதன் ரத்த மாதிரியை சேகரித்து டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் ஓரிரு தினங்களில் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வந்துவிடும். அதன் பிறகு அந்த நாய் கோகோவா அல்லது டைகரா என்பது உறுதியாக தெரிந்துவிடும்.
3 வயது நாய்க்காக இருவர் டிஎன்ஏ பரிசோதனை வரை சென்றது, அந்த நாயின் மீது அவர்கள் வைத்துள்ள பாசத்தை வெளிக்காட்டுவதாகவே உள்ளது.

மற்ற செய்திகள்
