நீங்க மட்டும் அந்த சமயத்துல 'உதவி' பண்ணலைன்னா??... உதவிய 'இளைஞர்'களின் வீட்டிற்கே சென்று சல்யூட் அடித்த 'போலீஸ்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில், துபாயில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கும் போது, மோசமான வானிலை காரணமாக விமானி கட்டுப்பாட்டை இழந்து தரையில் கவிழ்ந்த விமானம் இரண்டாக உடைந்தது.
இரவு நேரத்தில் இந்த விபத்து நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய நிலையில், விமான விபத்து நடந்த தகவல் கிடைத்ததும் அப்பகுதியிலுள்ள மக்கள் உடனடியாக திரண்டு தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதே போல, காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகளை மீட்டு தங்களது வாகனங்களிலேயே மருத்துவமனைக்கு வேகமாக கொண்டு சென்றனர்.
உள்ளூர் மக்களின் உடனடி நடவடிக்கையால், பலருக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டு அவர்களது உயிர் காப்பாற்றப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு நெட்டிசன்கள் அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்த நிலையில், இது பற்றி தகவலறிந்த சிஐஎஸ்எப் வீரர்கள், உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
போலீசாரின் இந்த செயலும், தற்போது மக்களின் பாராட்டை பெற்று வரும் அதே வேளையில், விமான விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், விபத்தின் மீட்பு பணிகளில் ஈடுபட்ட அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த செயல் கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.