'என் மாமியாரும், மனைவியும் என்ன செருப்பால அடிச்சாங்க பா'... 'சிக்கிய 22 பக்க கடிதம்'... 'பையன் மனசுக்குள்ள இருந்த குமுறல்'... நொறுங்கி போன தந்தை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாலி கட்டிய கணவன் என்று பாராமல் மனைவியும், வீட்டிற்கு வந்த மருமகன் என்று பாராமல் மாமியாரும் சேர்ந்து 2 பிள்ளைகளின் தகப்பனைத் தாக்கியுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி பின்னமூட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2011ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலாம் பகுதியைச் சேர்ந்த ஷெலின் ஷீபா என்று பெண்ணுடன் திருமணம் ஆனது. மகிழ்ச்சியாகச் சென்ற திருமண வாழ்க்கையின் பயனாக, ஜிஜால் சிங் என்ற மகனும், 6 வயதில் ஷைஷா என்ற மகளும் பிறந்தனர்.
இந்நிலையில் காவலர் ஜினிகுமார் சென்னையிலிருந்து கடந்த 6ம் தேதி நட்டாலத்தில் தனது தாய் வீட்டில் வசித்து வரும் மனைவி, குழந்தைகளைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஜினிகுமாரின் மாமியார் லலிதா, மனைவி ஷெலின் மற்றும் மைத்துனர் அஜின் ஆகியோர் உங்களிடம் சொத்து குறித்துப் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார்கள். ஜினிகுமாரும் பேச அமர, நட்டாலாம், வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துக்களைத் தனது மகளின் பெயரில் எழுதி வைக்க வேண்டும் என மாமியார் லலிதா கூறியுள்ளார்.
இதைச் சற்றும் எதிர்பாராத அவர், அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் அங்கு வாக்குவாதம் உருவான நிலையில், ஆத்திரமடைந்த மாமியார் லலிதா, மனைவி ஷெலின் மற்றும் மைத்துனர் அஜின் ஆகியோர் ஜினிகுமாரை கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளார்கள். மாமியார் வீட்டில் தான் அவமானப்பட்டதை நினைத்துக் கலங்கிய அவர் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்குத் தனது தந்தை பர்னபாசிடம் எதுவும் பேசாமல் இருந்த அவர், கடந்த 7ம் தேதி காலையில் ஜினிகுமார் தனது வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். மகனைக் காணவில்லையே என அவரது தந்தை தேடிய நிலையில், ஜினிகுமாரின் அறையில் 22 பக்க கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், தனது மனதிற்குள் இதனை நாட்களாகப் பூட்டி வைத்திருந்த சோகத்தை எல்லாம் ஜினிகுமார் அதில் கொட்டியுள்ளார்.
அந்த கடிதத்தில், ''அப்பா சிறிய வயதில் வறுமை நம்மை வாட்டிய போதும், எங்களை எவ்வளவு கண்டிப்புடனும், பாசத்துடனும் வளர்த்தீர்கள். செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டே என்னையும், எனது 2 சகோதரிகளையும் படிக்க வைத்தீர்கள். பின்னர் நானும் உங்களுடன் வேலை பார்த்ததை, மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன் அப்பா. பின்னர் நான் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, எனக்குப் பிடித்த காவல்துறை பணியில் எவ்வளவு மகிழ்ச்சியோடு சேர்ந்தேன்.
பின்னர் தனது தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததை நினைவு கூர்ந்துள்ள ஜினிகுமார், தனக்குத் திருமணமான பின்னர் அவர் எதிர்கொண்ட சிக்கல்களையும் எழுதியுள்ளார். ஆனால் நமது குடும்பத்திற்கு நேரெதிரான குடும்பமான தனது மனையின் குடும்பத்தைக் குறித்துக் குறிப்பிட்டுள்ள ஜினிகுமார், அவர்களிடம் இருந்து விலகியிருக்கத் தனது மனைவியைக் கூட அவரது தாய் வீட்டிற்கு அனுப்பாமல் இருந்ததையும் தெரிவித்துள்ளார்.
முதல் குழந்தை மகப்பேற்றிற்காகத் தாய் வீடு சென்று 2 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பிய மனைவி ஷெலினின் போக்கு அதன்பின் மாறி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். சொத்துக்களைக் கேட்டதோடு மட்டுமல்லாமல் தனது தந்தை வசிக்கும் வீட்டையும் தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என மனைவி கொடுத்த டார்ச்சர்களையும் ஜினிகுமார் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
ஒரு கட்டத்தில் மொத்த குடும்பமும் சேர்ந்து கொடுத்த தொந்தரவு எல்லை மீறிச் சென்றதன் விளைவாகத் தான், கடந்த 6ம் தேதி, தனது மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர் மூவரும் சேர்ந்து தன்னை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் நடந்ததாகவும் ஜினிகுமார் எழுதியுள்ளார். மாமியார் லலிதா தனது கழுத்திலிருந்த செயினைப் பறித்து தன்னை அசிங்கப்படுத்தியதை எழுதியுள்ள அவர், மானமிழந்து, மரியாதை இழந்து, நிம்மதி இழந்து குடும்பத்தில் வாழப் பிடிக்கவில்லை என உருக்கத்துடன் அந்த கடிதத்தில் ஜினிகுமார் கூறியுள்ளார்.
கடைசியாக, மனைவி குடும்பத்தினரால் மிரட்டல், அச்சுறுத்தல் இருப்பதால் தந்தை சட்டரீதியில் தன்னைக் காத்துக் கொள்ளும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகனின் கடிதத்தைப் பார்த்து நொறுங்கிப் போன ஜினிகுமாரின் தந்தை பர்னபாஸ், தனது மகனைக் கண்டுபிடித்துத் தரும்படியும், மருமகளிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்டுத் தரும்படியும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பணம், சொத்தின் மீது இருந்த வேட்கையால் மனைவியின் குடும்பமே சேர்ந்து கணவரைத் தாக்கியதோடு, அவரை அசிங்கப்படுத்தி அவர் வீட்டை விட்டு வெளியேறும்படி செய்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
