'உணவு' பொட்டலத்தை 'திறந்து' பார்த்த நபர்களுக்கு... காத்திருந்த 'ஆச்சர்யம்'... 'மனித'நேயத்தால் திரும்பி பார்க்க வைத்த கேரள 'பெண்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

கடும் வெள்ளம் காரணமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய பெண் ஒருவர் அதனுடன் சேர்த்து 100 ரூபாய் பணத்தையும் செலவுக்காக வைத்து அளித்துள்ளார். இந்த சம்பவத்தை பலதரப்பட்ட மக்கள் பாராட்டி வருகின்றனர்.
எர்ணாகுளம் மாவட்டம் கும்பலங்கி என்னும் கிராமத்தை சேர்ந்த மேரி செபஸ்டியன் என்ற அந்த பெண், தனது வீட்டில் உணவு தயாரித்து அந்த உணவு பொட்டலங்களை பல்வேறு பகுதிகளிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று அளித்து வந்துள்ளார். அதனுடன், யாருக்கும் தெரியாமல் உணவு பொட்டலத்திற்குள் 100 ரூபாய் வைத்து அதனை செல்லோ டேப் போட்டுக் கொடுத்துள்ளார்.
அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் உணவு பொட்டலத்தை பிரித்து பார்த்துள்ளார். அப்போது அதில் நூறு ரூபாய் இருந்துள்ளது. இது தொடர்பாக, தனது நண்பர்களுடன் விசாரித்த போது அவர்களுக்கும் உணவு பொட்டலங்களில் காசு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த உணவு பொட்டலங்களை யார் வழங்கியது என தேடிய போது மேரி செபாஸ்டியன் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரின் மனிதாபிமான செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் மற்றும் பரிசுகள் குவிந்து வருகிறது. இதுகுறித்து மேரி கூறுகையில், 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் கொடுக்கும் பணம் டீ குடிக்கவாவது பயன்படும் என நினைத்து தான் என்னாலான உதவியை செய்தேன். உணவு பொட்டலத்துக்குள் பணம் வைத்தால் நான் தான் உதவி செய்தேன் என்பதை அறிய இயலாது என நினைத்தேன். ஆனால் இப்போது அனைவருக்கும் தெரிந்து விட்டது' என தெரிவித்தார்.
ஊரடங்கு காரணமாக, மேரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் வேலையில்லாமல் தவித்து வந்துள்ளனர். கடந்த மாதம் 15 நாட்கள் மட்டும் தான் அவர் வேலைக்கு சென்றுள்ளார். அதில் கிடைத்த பணத்தை கொண்டு தான் அவர் இந்த உதவியை செய்துள்ளார்.

மற்ற செய்திகள்
