"ஆர்டர் செஞ்ச ஐ போன் வாங்க காசில்ல".. டெலிவரி செய்ய வந்த ஊழியருக்கு இளைஞரால் நேர்ந்த கொடூரம்.. கதிகலங்கிய கர்நாடகா!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் லட்சுமிபூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் நாயக். ஆன்லைன் டெலிவரி நிறுவனம் ஒன்றில் ஊழியராக அவர் பணிபுரிந்து வந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, டெலிவரி கொடுக்க சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது.

Images are subject to © copyright to their respective owners
இது தொடர்பாக, போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் ஹேமந்த் நாயக்கின் குடும்பத்தினர் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் கடைசியாக யார் வீட்டிற்கு டெலிவரி செய்தார் என்பதை பற்றி போலீசார் விசாரித்த போது அவர் அஞ்சு கொப்பளவு பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் தத்தா என்ற இளைஞரின் வீட்டிற்கு டெலிவரி செய்ய சென்றதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் ஹேமந்த் நாயக் கடைசியாக டெலிவரி செய்த பகுதி அருகே, எரிந்த நிலையில் சடலம் ஒன்றையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர். மேலும் இந்த சடலம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த சூழலில், அது ஹேமந்த் நாயக் என்பது உறுதியாகி உள்ளது. தொடர்ந்து, ஹேமந்த் தத்தா மீது போலீசருக்கு சந்தேகம் வந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது அவர் பைக்கில் செல்வது குறித்த காட்சிகளும் இடம்பெற ஹேமந்த தத்தாவை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறிய விஷயம், பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. ஐபோன் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த ஹேமந்த் தத்தா, உபயோகப்படுத்தப்பட்ட ஐபோன் ஒன்றை 46, 000 ரூபாய்க்கு ஆன்லைனில் கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆர்டரை குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்வதற்காக ஹேமந்த் நாயக்கும், ஹேமந்த் தத்தா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஹேமந்த் நாயக் ஃபோனை டெலிவரி செய்து விட்டு பணத்திற்காக காத்திருந்த சூழலில், மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து கொலை செய்துள்ளார் ஹேமந்த் தத்தா. தொடர்ந்து நாயக் உடலை நான்கு நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்த தத்தா, பின்னர் அருகேயுள்ள பகுதிக்கு கொண்டு சென்று ஆள் இல்லாத நேரத்தில் உடலை எரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
பணம் இல்லாத காரணத்தினால், ஐபோனை ஏமாற்றி வாங்கவும் தத்தா திட்டம் போட்டிருந்த சூழலில், டெலிவரி செய்ய வந்த ஊழியரையும் கொலை செய்துள்ள சம்பவம், கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது. தொடர்ந்து, ஹேமந்த் தத்தாவை கைது செய்துள்ள போலீசார், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்ற கோணத்திலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றது.

மற்ற செய்திகள்
