'விமானத்தில் செய்ற காரியமா இது?'... 'தொழிலதிபருக்கு கிடைத்த ஆயுள் தண்டனை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Jun 12, 2019 12:43 PM
ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தப்போவதாக வதந்தி பரப்பிய தொழிலதிபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி, டெல்லியிலிருந்து மும்பைக்கு 9w339 என்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானத்தின் கழிவறையில் உள்ள டிஷ்யூ பேப்பரில், ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளில், 'விமானத்தில் 12 கடத்தல்காரர்கள் உள்ளனர். சரக்குகள் வைக்கும் பகுதியில், சக்தி வாய்ந்த குண்டு இருக்கிறது. மேலும் விமானத்தை கடத்தப்போவதாக எழுதப்பட்டிருந்தது'.
இதையடுத்து, விமானம் அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு உஷார்நிலையில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விமானத்தில் பயணித்த, மும்பையை சேர்ந்த பிர்ஜூ சல்லா என்ற தொழிலதிபரை கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 'தனது காதலி, டெல்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், இவ்வாறு மிரட்டல் விடுத்தால், டெல்லி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு காதலி, மும்பை அலுவலகத்திற்கே வருவார் என்ற ஆசையில், இவ்வாறு செய்ததாகவும் பிர்ஜு சல்லா வாக்குமூலம்' அளித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த அகமதாபாத் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம், கடந்த செவ்வாய்கிழமையன்று தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றவாளியான பிர்ஜு சல்லாவுக்கு 5 கோடி அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக தெரிவித்தது. இந்த அபராதத் தொகை, அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பிர்ஜு சல்லா எந்த ஒரு விமானத்திலும் பறக்க முடியாது என்ற பட்டியலில் கொண்டு வரப்பட்டார்.