“பிரியங்கா காந்திக்கு நடந்ததுக்கு..” - ‘ஹத்ராஸ்’ பரபரப்பின்போது நடந்த ‘சர்ச்சைக்கு’ மன்னிப்பு கேட்ட ‘உ.பி காவல்துறை’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறச் சென்றபோது, பிரியங்கா காந்தியின் உடையைப் பிடித்து காவலர்கள் இழுத்ததாக எழுந்த புகாரை அடுத்து உத்தர பிரதேச காவலர்கள் பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
மொத்த நாட்டையும் உலுக்கிய ஹத்ராஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று நாடு முழுவதும் இருந்து குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு அரசியல் கட்சியினரும் பெண்கள் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பொதுமக்களும் கண்டன போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உ.பி கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் கடந்த வெள்ளிக்கிழமை ஹத்ராஸ் செல்ல முயன்றனர்.
ஆனால், ஹத்ராஸில் இருந்து 100 கி.மீட்டருக்கு முன்னதாக இருக்கும் கிரேட்டர் நொய்டாவிலேயே ராகுலும் பிரியங்காவும் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட காவலர்களையும் மீறி சாலையில் நடந்து செல்ல முயன்ற ராகுல் காந்தி போலீஸாரால் தள்ளிவிடப்பட்டதாக காங்கிரஸார் குற்றம் சாட்டினர். ஆனால் அதன்பின்னர், 144 தடை உத்தரவை மீறியதால் ராகுலும் பிரியங்காவும் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி கீழே விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதே சமயத்தில் உ.பி காவர்களின் லத்தியைப் பிடித்து காங்கிரஸ் தொண்டர்களைத் தாக்கக் கூடாது என்று பிரியங்கா, காவலர்களை எச்சரித்தபோது காவலர்கள், பிரியங்காவின் உடையைப் பிடித்து இழுத்தது தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனை அடுத்து இது கண்டிக்கத்தக்க விஷயம் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், பிரியங்கா காந்தியிடம் அவ்வாறு நடந்துகொண்டதற்கு உத்தரப்பிரதேச போலீஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.
இது தொடர்பாக உ.பி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்போது பிரியங்கா காந்தியுடன் நடந்த சம்பவத்துக்கு நொய்டா காவல்துறை வருத்தம் தெரிவிப்பதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும், மூத்த பெண் அதிகாரி ஒருவரை இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.