'எம்.எல்.ஏ.வை தாக்கிய கொரோனா'...'பரபரப்பான முதல்வர் அலுவலகம்'... தனிமைப்படுத்தி கொண்ட முதல்வர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 15, 2020 04:19 PM

எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குஜராத் முதல்வர் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

Gujarat CM Vijay Rupani is in self-quarantine as a precaution

குஜராத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட ஆய்வு கூட்டம் முதல்வர் தலைமையில், அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல், மாநில உள்துறை மந்திரி பிரதீப்சின் ஜடேஜா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் பங்கேற்றனர். இந்த சூழ்நிலையில் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்ற ஹாடியா-ஜமால்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கிடவாலாவுக்கு நேற்று மாலை கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல்வர் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏவுக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எம்.எல்.ஏ. இம்ரான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும்  முதல்-மந்திரி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பான முதல்வர் அலுவலகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் விஜய் ரூபானி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.