மோடியின் பேரால் அதிக லாபம் ஈட்டும் 'தக்காளி'.. அப்படி என்ன நடந்துச்சு?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Apr 29, 2019 04:39 PM
பிரதமர் மோடியின் பெயர் பொறித்த தக்காளியை பயிரிட்டு ஆந்திர விவசாயி ஒருவர் இணையத்தில் ஃபேமஸாகியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்புவரை மோடி அலை என்று ஒன்று இருந்தது. இந்திய பிரதமராக மோடி உருவாகி வந்த நேரத்தில்தான், இத்தகைய மோடி அலை நாட்டில் உருவாகி ஓய்ந்தது. மோடியின் வியூகம், எதிர்காலத் திட்டம் உள்ளிட்ட பலவும், மக்களிடையே மோடி அலை மேலெழும்பியதற்கான காரணங்களாக இருந்தன.
ஆனாலும் மோடியை முழுமையான நம்பிக்கையின்பால் தொழும் அளவிலான மக்கள் தொடர்ந்து மோடி மீதான தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறவே இல்லை. அவர்கள் எதேனும் ஒரு விதத்தில் தங்கள் நாட்டினையும், தங்களது பிரதமரையும் விட்டுக்கொடுக்காதவர்களாயினர். அவர்களுக்கான தயாரிப்புகளைக் கொடுக்கும் நிறுவனங்கள் எப்போதுமே வீழ்ச்சியை சந்திப்பதும் இல்லை.
அப்படித்தான் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தின் மடனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் பிரபலமாகி வருகிறார். மென்பொருள் பொறியாளராக இருந்த இவர், அந்த பணியைத் துறந்து, விவசாயத்தில் தனது புதுமையை வெளிப்படுத்தினார். ஆம், கர்னூலைச் சேர்ந்த தனியார் நிறுவனம், வித்தியாசமான முறையில் தக்காளிகளை பயிரிட்டால் 25 சதவீதம் கூடுதலான லாபங்களை வழங்குவதாக அறிவித்திருந்தது.
அதைப் பார்த்துவிட்டு, அந்த நிறுவனத்தை அணுகிய சிவகுமாருக்கு, அந்நிறுவனத்தில் இருந்து பிரதமர் பெயர் மற்றும் இந்திய வரைபடம் போட்ட அச்சு வழங்கப்பட்டது. இந்த அச்சினை வைத்து தக்காளி தயாரித்தால், தக்காளியின் ஒருபுறம் மோடி என்று ஆங்கிலத்திலும், இன்னொரு புறம் இந்திய வரைபடமும் இருப்பதால், தனது தக்காளிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதாக சிவகுமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.