‘அவனுக்கு இப்போதான் பொண்ணு பாத்துட்டு இருந்தோம்’.. ‘என் மகனை ஏன் கொல்லணும்’.. கதறி அழுத குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 27, 2020 10:45 AM

டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் மத்திய உளவுத்துறையில் பணியாற்றிய அன்கித் ஷர்மா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Delhi Intelligence Bureau officer killed in mob attack

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலவரத்தில் மத்திய உளவுத்துறையில் பணியாற்றிய அன்கித் ஷர்மா (27) என்பவர், வன்முறையாளர்கள் கற்களைக் கொண்டு தாக்கியதால் உயிரிழந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இவரது தந்தை டெல்லிக் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.

நேற்றுமுன்தினம் வெளியே கிளம்பிய அன்கித் ஷர்மா வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று ஜாஃப்ராபாத் பகுதியில் உள்ள வடிகால் ஒன்றிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. அவரது தந்தை நேரில் சென்று பார்த்து இறந்தது தனது மகன்தான் என்பதை உறுதி செய்தார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய அன்கித் ஷர்மாவின் சகோதர், அன்கித் வேலை முடிந்து மாலை 4:30 மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிட்டார். இந்த பகுதியில் நடந்த கலவரத்தைப் பார்ப்பதற்காக வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர் இறந்த செய்தி மட்டுமே எங்களுக்கு கிடைத்தது. வன்முறையாளர்கள் அன்கித்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவருடன் சென்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் தடுக்கமுடியவில்லை. இதில் அவரது நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அன்கித்தின் தந்தை தேவேந்திர ஷர்மா, ‘ என் மகனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அவனுக்கு இப்போதுதான் பெண் பார்த்துக்கொண்டு இருந்தோம். அவன் இறப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் மகனை கடுமையாக தாக்கியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார். அன்கித் இறந்த செய்தியை கேட்ட அவரது தாய், ‘என் குழந்தையை ஏன் கொல்ல வேண்டும்’ என கதறி அழுதார். இந்நிலையில் வன்முறையாளர்கள் கற்களைக் கொண்டு தாக்கியதால் அன்கித் இறந்திருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

News Credits: Vikatan

Tags : #ATTACKED #PROTEST #KILLED #DELHI #ANKITSHARMA #INTELLIGENCEBUREAU #DELHIVOILENCE #DELHIBURNING