PASSPORT க்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.. மனைவிக்கு தெரியாம காதலியை பார்க்க வெளிநாடு போன கணவன் போலீசில் சிக்கிய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனைவிக்கு தெரியாமல் காதலியை சந்திக்க வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சொல்லப்படும் நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக தாய்லாந்து செல்ல முடிவெடுத்திருக்கிறார் அவர். விமான நிலைய அதிகாரிகளிடம் தனது பாஸ்போர்ட்டை கொடுத்த அந்நபர், சற்று நேரம் காத்திருந்திருக்கிறார்.
பக்கத்தை காணவில்லை
விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதித்திருக்கிறார்கள். அப்போது, அதில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள் அதிகாரிகள். ஆனால், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இது குறித்து காவல்துறைக்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுக்கவே விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்திருக்கின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில்,"2019 ஆம் ஆண்டு தாய்லாந்துக்குச் சென்ற அவரது பயண வரலாற்றை மறைக்க பாஸ்போர்ட்டில் 3 முதல் 6 மற்றும் 31 முதல் 34 வரை பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளனர். தனது மனைவிக்கு தெரியாமல் காதலியை சந்திக்க சென்றதாகவும், தடயத்தை மறைக்கவே பாஸ்போர்ட்டின் பக்கங்களை அவர் கிழித்ததாகவும் தெரிகிறது.
குற்றம்
பாஸ்போர்ட் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. ஆகவே அதை வேண்டுமென்றே சேதப்படுத்துவது குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. அந்த நபர் மீது ஐபிசி பிரிவு 420, 465, 468, 471 மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ரூ.25,000 ஜாமீன் ஜாமீன் தொகையை செலுத்திய பிறகு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருடைய வழக்கறிஞர் இதுபற்றி பேசுகையில்," அவர் மிகவும் சாதுவான குணமுள்ளவர். அவர் பாஸ்போர்ட்டின் பக்கங்களை கிழிக்கவில்லை. பைண்டிங் தளர்வாக இருந்ததால் பக்கங்கள் விடுபட்டிருக்கின்றன" என்றார்.

மற்ற செய்திகள்
