நாட்டிலேயே 'இந்த' 5 நகரங்களில் தான்... 'கொரோனா' பரவல் அதிகம்: உள்துறை அமைச்சகம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 25, 2020 12:01 AM

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Covid-19 situation serious in Ahmedabad, Surat, Hyderabad, Chennai: MH

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க வருகின்ற மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்று பிரதமர் மோடி வருகின்ற 27-ம் தேதி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டின்  சில இடங்களில் ஊரடங்கு விதிகள் மீறப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஊரடங்கு விதிகளை மீறுவது மிகவும் ஆபத்தானது ஆகும். கொரோனா பரவலுக்கு இதுவே வழிவகுக்கிறது.  ஹாட்ஸ்பாட் (கொரோனா பாதிப்பு அதி தீவிரமாக இருக்கும் இடங்கள்) மாவட்டங்கள் அல்லது ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக உருவெடுத்து வரும் அகமதாபாத் மற்றும் சூரத் (குஜராத்) தானே (மராட்டியம்), ஐதராபாத் (தெலுங்கானா), சென்னை (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு  மிகவும்  தீவிரமாக உள்ளது. 

நாட்டில் கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் மதிப்பீடு செய்வதற்கு 10 மத்தியக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, அந்தந்த நகரங்களில் ஆய்வு செய்து, மாநில அரசுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும். முன்னதாக மத்திய பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா  மாநிலங்களுக்கு மத்திய குழு  சென்றிருந்தது கவனிக்கத்தக்கது.