'கொரோனா' தடுப்பில் 'நிக்கோட்டின்' பலனளிக்குமா?... முதல்கட்ட 'சோதனையை' தொடங்கியுள்ள பிரான்ஸ் 'ஆராய்ச்சியாளர்கள்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 24, 2020 06:54 PM

நிக்கோடினை பயன்படுத்தி கொரோனா பாதிப்பை தடுக்கும் முதல்கட்ட சோதனையை பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் நடத்த உள்ளனர்.

France Doing Test To Cure Coronavirus From Nicotine

கொரோனாவைத் தடுக்க அல்லது நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க நிக்கோடினை பயன்படுத்தலாமா என்பது குறித்து பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர். பாரீஸ் மருத்துவமனை ஒன்றில் உள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 343 பேர் மற்றும் லேசான அறிகுறிகளுடன் இருந்த 139 பேரை பரிசோதித்து இதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரான்ஸ் மக்களில் புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்களின் சதவீதத்துடன் ஒப்பிடும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே புகைபிடிப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் ஆய்வில் பரிசோதித்த நோயாளிகளில் 5 சதவீதத்தினர் மட்டுமே புகைப்பிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் சிகரெட்டில் உள்ள நிக்கோடின் செல் ஏற்பிகள் வைரஸ் உயிரணுக்களுக்குள் நுழைவதையும் உடலில் பரவுவதையும் தடுக்கிறது என பிரான்சின் பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டின் புகழ்பெற்ற நரம்பியலாளர் ஜீன்-பியர் சேஞ்சக்ஸ் கூறியுள்ளார். மேலும் இந்த ஆய்வில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவாக ஏற்படலாம் எனக் கூறப்படும் போதும் அவர்களுக்கு அந்த பழக்கத்தால் ஏற்கெனவே நுரையீரல் பலவீனமாக இருக்கும் என்பதால், கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஆபத்து அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது .

அதாவது  இங்கு வல்லுநர்கள் மக்கள் புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கவில்லை, வைரஸுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையாக நிக்கோடின் திட்டுகளையே பயன்படுத்தி சோதனை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இது சோதனை நிலையிலே உள்ளதால் நிக்கோடினின் தீங்கு தரும் விளைவுகளையும் நாம் மறந்துவிடக் கூடாது எனவும், புகைபிடிக்காதவர்கள் நிக்கோடின் மாற்றுகளைப் பயன்படுத்தக்கூடாது, அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.