‘எப்படி வந்ததுனே தெரியலை’... 'நான்கு மாத பச்சிளம்’... ‘பெண் குழந்தைக்கு நிகழ்ந்த துக்கம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇருதயக் கோளாறு, நிமோனியா மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் பயநாடு கிராமத்தைச் சேர்ந்த 4 மாத பச்சிளம் குழந்தை ஒன்று, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி சுவாசப் பிரச்சனை காரணமாக, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு நிமோனியா பாதிப்பு அதிகமாகவே, ஏப்ரல் 21-ல் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஏற்கனவே இதயம் சம்பந்தபட்ட பிரச்னையுடன் பிறந்த அந்த குழந்தைக்கு, ஏப்ரல் 22-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2-வது கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே இன்று காலை அந்த பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்தது. குழந்தைக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. வெளிநாடு சென்று வந்த உறவினர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. ஆனால் அந்த உறவினர் எந்த வகையிலும் குழந்தையுடன் நேரடி தொடர்பில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் மற்றும் மருத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்துள்ளனர்.
அந்தக் குழந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், அரசு வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலாஜா, “குழந்தைக்கு கடுமையான இதய கோளாறு இருந்தது. நுரையீரல் செயல்பாடும் குறைவாக இருந்ததால் சிகிச்சைக்கு குழந்தையின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. எவ்வளவோ முயன்றும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை” என்று வருத்தம் தெரிவித்துள்ளார். கொரோனா இறப்பு மற்றும் பாதிப்பு விகிதத்தில் முன்னேறி வரும் நிலையில், இந்த சம்பவம் கேரள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.