'இந்தியர்களின் அடிமடியில் கைவைத்த கொரோனா'... 'கையை பிசையும் மாத சம்பளக்காரர்கள்'... என்ன நடக்கும்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 21, 2020 05:19 PM

சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களின் மாத செலவையும் ஒரு வழி பண்ணாமல் போகாது என்ற கணக்கில் தற்போது உள்ளது.

Coronavirus : TV prices may rise up to 10% from March

கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவை நிலைகுலையச் செய்துள்ள நிலையில், சீனாவின் பொருளாதாரம்  கடும் பாதிப்பைச் சந்தித்து உள்ளது. அச்சத்தின் காரணமாக உலக நாடுகள், சீனாவிடம் இருந்து வாங்குவதையும், விற்பதையும் தற்போதைக்கு நிறுத்தியுள்ளன. இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வெகுவாக பாதித்துள்ளது.

அது சரி, இதனால் இந்திய நடுத்தர வர்க்கம் எப்படிப் பாதிப்படையும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அதற்கும் காரணம் இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு  காரணமாக இந்தியாவில் கட்டுமானம், ஆட்டோ, ரசாயனங்கள் மற்றும் மருந்தியல் துறைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தியா தனது மின் இயந்திரங்களில் 40 சதவீதம்  சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியா தனது இயந்திரங்கள் மற்றும் இயந்திர சாதனங்களில் மூன்றில் ஒரு பகுதியைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.

தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாகச் சீனாவில் தொழில், உற்பத்தி, வர்த்தகம் முடங்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு  மின் இயந்திரங்கள்,  இயந்திர உபகரணங்கள், கரிம இரசாயனங்கள், பிளாஸ்டிக் மற்றும் ஆப்டிகல் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் ஆகியவற்றின் இறக்குமதியும் வெகுவாக பாதிக்கப்படும். இந்த பொருட்களின் இறக்குமதிக்குச் சீனாவையே இந்தியா பெரிதும் நம்பியுள்ளது.

இதனிடையே மக்கள் சகஜமாக உபயோகிக்கும் தொலைக்காட்சி, ஏசி,பிரிட்ஜ் விலை  உயரும் அபாயத்தில் உள்ளது. தொலைக்காட்சிக்குப் பயன்படுத்தப்படும் பேனல்கள், சீனாவில் விலை குறைவு என்பதால் தொலைக்காட்சி  தயாரிப்பு நிறுவனங்கள், சீனாவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்து வருகின்றன. தற்போது அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மே மாதம் நெருங்க உள்ள நிலையில், பலரும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏசி, பிரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவது வழக்கம். தற்போது அதன் கம்ப்ரசர்களின் விநியோகமும் தடைப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Tags : #CORONAVIRUS #TV PRICES #RISE UP