VIDEO: ‘ஒரே ஒரு தண்ணி பாட்டில்தான் இருக்கு’.. ‘எங்கள எப்டியாவது காப்பாத்துங்க’.. சீனாவில் சிக்கி தவிக்கும் தம்பதி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 18, 2020 11:56 AM

சீனாவில் சிக்கியுள்ள தங்களை மீட்க வேண்டும் என இந்திய தம்பதியினர் வீடியோ வெளியிட்டு அரசிடம் உதவி கோரியுள்ளனர்.

Coronavirus Indian couple in Wuhan appeals For help in video

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சீனாவில் உள்ள மற்ற நாடுகளை சேர்ந்த மக்களையும் விமானங்கள் மூலம் மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றது. சில வாரங்களுக்கு முன்பு சீனாவில் இருந்த 650 இந்தியர்கள் விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பேராசிரியர் தம்பதியினர் வுகானில் சிக்கி தவித்து வரும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஷிஷ் யாதவ் வுகானில் உள்ள டெக்ஸ்டைல் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நேகா முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேகாவின் அறுவை சிகிச்சை காரணமாக இந்தியா அனுப்பிய விமானத்தில் அவர்களால் வர முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், ‘பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள குடியிருப்பில் தங்கியுள்ளோம். மாணவர்கள் அனைவரும் இப்பகுதியில்தான் வசித்து வந்தனர். ஆனால் தற்போது யாரும் இங்கு இல்லை. நாங்கள் வசிக்கும் குடியிருப்பிலும் யாரும் இல்லை. ஒரே ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே உள்ளது. சில காய்கறிகள் மட்டுமே எங்களிடம் மிஞ்சி உள்ளன’ என பேசியுள்ளனர்.

இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அவர்கள் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், ‘வானிலை மிகவும் மோசமாக உள்ளது. நேற்றில் இருந்து லேசாக மழை பெய்து வருகிறது. எங்களிடம் தண்ணீரும் குறைந்த அளவே உள்ளது. இங்குள்ள அதிகாரிகளிடம் தண்ணீர் மற்றும் உணவு வேண்டும் என கோரிக்கை வைத்தபின் சிறதளவு அனுப்பி வைத்தனர். அவையும் விரைவில் தீர்ந்து விடும் நிலையில் உள்ளது. எங்களை விரைவில் மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறிய அவர் காலி தண்ணீர் பாட்டிகளையும், மிஞ்சியுள்ள உணவுப் பொருட்களையும் காட்டினர்.

இதனைத் தொடர்ந்து சீனாவில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில், ‘சீனாவுக்கு உதவி செய்யும் விதமாக இந்த வாரம் மருத்துவப் பொருட்களை இந்தியா அனுப்ப உள்ளது. அந்த விமானம் திரும்பும்போது இந்தியாவுக்கு வர விரும்பும் இந்தியர்கள் அதில் பயணிக்கலாம். பயணிக்க விரும்பும் அனைவரும் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்களையும் பதிவிட்டுள்ளது.

News Credits: NDTV

 

Tags : #CHINA #CORONAVIRUS #INDIANCOUPLE #HELP #WUHAN