கொரோனா 'பரவலை' குறைப்பதில்... அமெரிக்கா, இத்தாலி நாடுகளை விட... 'இந்த' நாடு தான் ரொம்ப 'பெஸ்ட்'டாம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பரவலை குறைப்பதில் அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசு நாடுகளை விட இந்தியா தான் பெஸ்ட் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் எந்தவித பாகுபாடும் இன்றி ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரை தடுப்பூசி மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி மட்டுமே கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
ஒருபுறம் கொரோனாவை கட்டுக்குள் வைத்தாலும் மறுபுறம் வேலையின்மை, பொருளாதார இழப்பு ஆகியவற்றை உலக நாடுகள் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் ஒவ்வொரு நாடும் கொரோனாவை எதிர்கொள்ளும் விதமும் உலக அரங்கில் விவாத பொருளாகி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளை விட இந்தியா திறமையாக எதிர்கொண்டுள்ளது.
இதுகுறித்து வெளியான புள்ளிவிவரங்கள் இதை உறுதி செய்துள்ளன. மேற்சொன்ன நாடுகளை காட்டிலும் சுகாதார உள்கட்டமைப்பு இந்தியாவில் குறைவு. அதோடு மக்கள் தொகையும்(136 கோடி) அதிகம். எனினும் வல்லரசு நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனாகுறைவாகவே உள்ளது. இந்தியாவில் மொத்தம் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1 லட்சத்தை தாண்டியது, அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,100 ஆக உள்ளது.
அதாவது கொரோனா பரவ ஆரம்பித்து சுமார் 64 நாட்கள் கழித்தே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 1 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே நேரம் அமெரிக்காவில் 25 நாட்களிலும், இத்தாலியில் 36 நாட்களிலும், இங்கிலாந்தில் 42 நாட்களிலும், பிரான்ஸில் 39 நாட்களிலும், ஸ்பெயினில் 30 நாட்களிலும், ஜெர்மனியில் 35 நாட்களிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா சோதனைகளை பொறுத்தவரை அமெரிக்கா இதுவரை 1,23,00,744 சோதனைகளை மேற்கொண்டுள்ளது. ஜெர்மனி 31,47,771 சோதனைகளையும், இத்தாலி 30,41,336 சோதனைகளையும் மேற்கொண்டுள்ளது. ஸ்பெயின் 30,37,840 சோதனைகளையும், இங்கிலாந்து 26,82,716 சோதனைகளையும், இந்தியா 24,04,267 சோதனைகளையும், பிரான்ஸ் 13,84,663 சோதனைகளையும் மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.