ஒரே நாளில் 24 அமைச்சர்கள் ராஜினாமா.. புதிய அமைச்சரவை அமைக்கும் பணி தீவிரம்.. என்ன நடக்கிறது ஆந்திராவில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் ஒட்டுமொத்த கேபினெட் அமைச்சர்களும் ராஜினாமா செய்து உள்ளனர். இது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவுகளுக்கு பெயர்போனவர். தந்தை இறந்ததும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்னும் கட்சியை துவங்கிய இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 இடங்களில் 67 இடங்களை அந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் கட்சி கைப்பற்றியது.
ஆனால், அதன்பிறகு 2019 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் 151 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் அந்த கட்சி ஆட்சி அமைத்தது.
பாதி கால அமைச்சர்கள்
தேர்தலில் வெற்றிபெற்று ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றதும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றுதான் கேபினெட் அமைச்சரவை இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும் என்ற அறிவிப்பு. அதன்படி, ஆட்சியின் முதல் பகுதியில் ஒரு கேபினெட் அமைச்சரவையும் இரண்டாம் பாதியில் வேறு உறுப்பினர்களை கொண்ட கேபினெட் அமைச்சரவையும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து நேற்று முதல் பாதி கால அமைச்சரவையில் இருந்த 24 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். வரும் 11 ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் நகரி தொகுதி எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா, சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி உள்ளிட்ட புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய முன்னாள் தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சர் வெங்கடராமைய்யா," 24 அமைச்சர்களின் ராஜினாமா கடிதம் உடனடியாக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக சேவை செய்த 5 அல்லது 6 பேரை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பார்கள்" என்றார்.