ஏடிஎம் வாசல்ல மயங்கி விழுந்த அப்பா.. என்ன நடக்குதுன்னு தெரியாம அழுத 2 வயது மகன்.. திண்டுக்கல்லில் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 2 வயது மகன் முன்னே தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆதார் கார்டு
வேட சந்தூர் அருகே உள்ள எரியோடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. 30 வயதான இவர் தனது இரண்டு வயது மகனை அழைத்துக்கொண்டு புதிய ஆதார் கார்டு வாங்குவதற்காக வேடசந்தூருக்கு சென்று இருக்கிறார். பேருந்தில் இறங்கியதும் அருகில் இருந்த ஏடிஎம் -ல் பணம் எடுக்கச் செல்லும்போது தனது உடலில் ஏதோ விபரீதமாக நடைபெறுகிறது என்பதை அறிந்த கிருஷ்ண மூர்த்தி தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து விஷயத்தை கூறி இருக்கிறார்.
உடல் அசவுகரியம் காரணமாக ஏடிஎம் வாசலில் அமர்ந்த கிருஷ்ண மூர்த்தி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். இதனைப் பார்த்த அவரது இரண்டு வயது மகன் கதறி அழவே, அப்போது ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த இரண்டு பெண்கள் கிருஷண மூர்த்தியை எழுப்பி இருக்கிறார்கள்.
கதறி அழுத சிறுவன்
ஆனால், சம்பவ இடத்திலேயே கிருஷ்ண மூர்த்தி மரணம் அடைந்தது தெரிந்ததும் அதிர்ச்சியான அந்தப் பெண்கள், நடப்பது என்னவென்று தெரியாமல் அழுது கொண்டிருந்த குழந்தைக்கு ஜூஸ், பிஸ்கட் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்.
இதனிடையே அங்கு கூடிய பொது மக்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து உள்ளனர். உயிரிழந்த கிருஷ்ண மூர்த்தியின் உடலை அருகில் இருந்தவர்களே ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கிருஷ்ண மூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ள்ளனர். 2 வயது மகன் கண் எதிரே தந்தை மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் வேடசந்தூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.