என் மகனாவே இருந்தாலும் அவன் செஞ்சது பெரிய தப்பு.. லேப்டாப்பில் இருந்த ஆதாரம்.. மகனை போலீஸில் பிடித்துக் கொடுத்த அப்பா..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 22, 2022 11:13 PM

இளம்பெண் கொலை வழக்கில் தனது மகனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி தந்தை ஒருவர் போலீசாரிடம் கொடுத்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

Father gave evidence to police against his own son

மும்பை

மும்பையில் உள்ள மிஸ்குய்ட்டா பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் கேரல் (வயது 29). இவர் தனியார் கால் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கடந்த மாதம் 24-ம் தேதி தோழி ஒருவரை சந்திக்க போவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கேரல் சென்றுள்ளார். ஆனால் இரவு 10 மணிக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இளம்பெண் கொலை

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரலை தேடி வந்தனர். இந்த சூழலில் கடந்த 3-ம் தேதியன்று பல்கார் நகரில் உள்ள புதர் ஒன்றில் கேரலின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இதனை அடுத்து நடந்த பிரேதப் பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

காதலன்

இதனை அடுத்து கேரலின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் அப் தகவல்கள் உள்ளிட்டவற்றை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது நண்பரான ஜீக்கோ (வயது 27) என்பவருடன் கேரல் கடைசியாக இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஜீக்கோவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

லேப்டாப்

இதனிடையே ஜீக்கோவின் தந்தை அன்சேம், தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்துள்ளார். அப்போது சம்பவத்தன்று இரவு, தனது மகன் ஜீக்கோ பைக்கில் வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் ஜீக்கோ வீட்டில் மறைத்து வைத்திருந்த அவரது லேப்டாப்பையும் எடுத்து அவர், அதிலிருந்த சில ஆதாரங்களையும் அன்சேம் திரட்டியிருக்கிறார். பின்னர், காவல் நிலையத்திற்கு போன் செய்த அவர், தனது மகன் ஜீக்கோவுக்கு எதிரான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக கூறினார்.

வாக்குமூலம்

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அன்சேம் கொடுத்த ஆதாரங்களை எடுத்துச் சென்றனர். அந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே, ஜீக்கோவை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்த காரணத்தால் கேரலை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

தந்தை

இதுகுறித்து கூறிய ஜீக்கோவின் தந்தை அன்சேம்,‘ஜீக்கோவும், கேரலும் நண்பர்களாக இருந்தனர் என்பது மட்டுமே எங்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் காதலித்த விஷயம் எங்களுக்கு தெரியாது. என்ன நடந்திருந்தாலும், கேரலை கொலை செய்யும் அளவுக்கு ஜீக்கோ சென்றிருக்கக் கூடாது. ஜீக்கோ தவறு செய்திருந்தால், அவன் நிச்சயம் தண்டனையை அனுபவிக்க வேண்டும். நான் நினைத்திருந்தால் எனது மகனை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் ஒரு குற்றவாளியை காப்பாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான், அவனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி போலீசாரிடம் கொடுத்தேன்’ என அவர் கூறினார்.

Tags : #MUMBAI #CRIME #MURDER #FATHER #SON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Father gave evidence to police against his own son | India News.