சபரிமலைக்கு அனைவரும் செல்லலாம் என்ற சட்டத்துக்குப் பின் முதல் முறையாக சபரிமலைக்குச் சென்ற பெண் மீது தற்போது மர்ம நபர் ஒருவர் நடு ரோட்டில் கொடூரத் தாக்குத நடத்தி உள்ளார்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து முதல் பெண் ஆக பிந்து அம்மினி என்ற பெண் சபரிமலைக்குச் சென்று வந்தார். இவர் கேரளாவில் பணியாற்றும் ஒரு வழிக்கறிஞர் ஆவார்.
பிந்து சபரிமலைக்குச் சென்று வந்ததில் இருந்து அவர் மீது வன்முறை தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தனது வழக்கு ஒன்றுக்காக பிந்து கோழிக்கோடு பயணம் செய்துள்ளார். கோழிக்கோடு பகுதியில் சாலை ஒன்றில் பிந்து நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பிந்து மீது கடுமையான தாக்குதலை நடத்தினார்.
பிந்துவும் தன்னை தற்காத்துக் கொள்ள முயல்கிறார். ஆனால், அந்த மர்ம நபர் பிந்துவை கீழே சாலையில் தள்ளிவிட்டு தாக்குகிறார். இந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல் குறித்து பிந்து கூறுகையில், "எனக்கு சில நாட்களாக இதுபோன்ற வன்முறை சம்பவம் ஒன்று நடக்கப் போவதாக அனுமானம் இருந்தது. இதனால் கொயிலாண்டி போலீஸாரிடம் எனக்குப் பாதுகாப்பு தர வேண்டி கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால், எனது கோரிக்கையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இன்று என்னத் தாக்கிய அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், எளிதில் ஜாமினில் வெளியே வந்துவிடக் கூடிய வழக்கு ஒன்று தான் அவர் மீது பதியப்பட்டுள்ளது. எனக்குத் தேவையான பாதுகாப்பை, நீதியை கேரள போலீஸ் தரும் என எனக்கு நம்பிக்கை இல்லை" எனக் கூறியுள்ளார்.