மீண்டும் தமிழகத்தில் இ-பாஸ் முறை அமலுக்கு வரப்போகிறதா..? பழையபடி டார்ச்சர் செய்யும் கொரோனா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகத்தில் பரவி வரும் நிலையில் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஒருவேளை அவ்வாறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு இ-பாஸ் முறை நடைமுறைக்கு வருமா என்பதும் தற்போது கேள்வியாக எழுந்துள்ளது.
தமிழகத்தில் சமூக பரவல்:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 4,862 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதாவது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 5,000-ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு மேலும் 9 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 2,481 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
மூன்றாவது அலை:
கொரோனா வைரஸில் இருந்து 688 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால், தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதில் ஒமைக்ரான் வேறு புதிதாக கிளம்பி டார்ச்சர் செய்து வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகையில் கொரோனா வைரஸ் தீவிரமாகுமா?
இதனையடுத்து தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத நிகழ்சிகள், ஆன்மீக கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்கள், வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என புதிய உத்தரவுகள் போடப்பட்டுள்ளன. பஸ் போக்குவரத்தை பொருத்தவரை முழு ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்து இயங்காது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொங்கல் பண்டிகை நாட்களில் கடை வீதிகளிலும் நிகழ்ச்சிகளிலும் கூடும் கூட்டங்களால் கொரோனா வைரஸ் பரவுவது தீவிரமாகும் என கூறப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அவசியமா?
பொங்கல் நேரத்தில் மக்கள் பொதுஇடங்களில் அதிகமாக கூடுவர், அது மட்டுமல்லாமல் காணும் பொங்கல் அன்று கடற்கரை, ஆற்றங்கரை பகுதிகளில் மக்கள் கூடுவது வாடிக்கையாக இருக்கிறது.
ஆனாலும், அரசு அறிவித்த ஊடரங்கு, கட்டுப்பாடுகள் எல்லாம் நடைமுறைக்கு வந்துள்ளது. தடுப்பூசி போடுவது, மாஸ்க் அணிவது உள்ளிட்டவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும். எனவே இப்போதைக்கு முழு ஊரடங்கு மற்றும் இ-பாஸ் நடைமுறைகள் இப்போதைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.