‘6 வாரங்கள் போதும்’... ‘வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரசுக்கு’... ‘நம்பிக்கையளித்த நிறுவனம்’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்புதிதாகப் பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை 6 வாரங்களில் உருவாக்க முடியும் என்று பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் உருவாகி, இந்த வருடம் முழுவதையும் கொரோனா வைரஸ் பரவல் ஆட்டி படைத்து வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனம் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியது.
இது 95 சதவீதம் பலனளிக்கும் என்று ஆய்வுகள் கூறியதால், உலகத்திலேயே முதல் நாடாக, பிரிட்டன் இந்த தடுப்பு மருந்தை கடந்த 8-ம் தேதி முதல் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது. இதையடுத்து, அமெரிக்கா, கனடா, பஹ்ரைன் போன்ற நாடுகளும் ஒப்புதல் வழங்கியுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சில நாட்களிலேயே, பிரிட்டனில் உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி மேலும் சிக்கலை உண்டாக்கியது.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் தற்போது பரவுவது புதிய வகை கொரோனா வைரஸ் என்றும், இந்த புதிய வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70 சதவிகிதம் வேகமாகப் பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்தப் புதிய வகை கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பு மருந்து வேலை செய்யுமா என்று கேள்வியும் நிலவுகிறது.
இதற்குப் பதிலளித்துள்ள பயோஎன்டெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் உகுர் சாஹின், ‘அறிவியல்பூர்வமாக பார்க்கும்போது தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் நமது தடுப்பு மருந்து வேலை செய்யும். இருப்பினும், தேவைப்படும்பட்சத்தில் வெறும் 6 வாரங்களில் புதிய வகை கொரோனவுக்கு தடுப்பு மருந்தை உருவாக்க முடியும்.
பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா ஒன்பது வித மாற்றங்களைக் கொண்டுள்ளது. வழக்கமாக இதுபோல புதிதாகக் கண்டறியப்படும் கொரோனா வகைகளில் ஒரு மாற்றம் மட்டும் இருக்கும். ஃபைசருடன் இணைந்து நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பலனுள்ளதாகவே இருக்கும்.
ஏனென்றால், அதில் 1,000க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன, அவற்றில் ஒன்பது மட்டுமே புதிய வகையில் மாறியுள்ளன. அதாவது, 99 சதவீத புரதம் இன்னும் அதே மாதிரியாக இருக்கிறது. இதனால் எங்கள் தடுப்பு மருந்து வழக்கம்போல பலனளிக்கும்’ என்று கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
