“கண்ணை மூடு சர்ப்ரைஸ் கிஃப்ட் தர்ரேன்”.. வருங்கால கணவரை மலைக்கு அழைத்துச் சென்று.. இளம்பெண் செய்த அதிர்ச்சி காரியம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் நிச்சயக்கப்பட்ட இளைஞருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் தருகிறேன் எனக் கூறி இளம்பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அமராபூர் கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ராம நாயுடுவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் புஷ்பாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அமராபூர் பகுதியில் உள்ள சாய்பாபா என்ற மலைக்கு தனது வருங்கால கணவரை இளம்பெண் அழைத்துள்ளார். அங்கு வைத்து தனது நண்பர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அப்பெண் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த இளைஞரும் அங்கு சென்றுள்ளார். சுமார் ஒரு மணிநேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
இதனை அடுத்து மாலை வீடு திரும்பும் போது ஆட்கள் யாரும் இல்லாத இடத்தில் திடீரென நின்ற அப்பெண், இளைஞருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்று தரப்போவதாக கூறியுள்ளார். இதனால் கண்ணை மூடுமாறு கூறி, தனது துப்பட்டாவால் இளைஞரின் கண்ணை கட்டியுள்ளார். தனது வருங்கால மனைவி தனக்கு ஏதோ பரிசு தரப் போகிறார் என காத்திருந்த இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளைஞரின் கழுத்தை வெட்டி விட்டு இளம்பெண் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த இளைஞர் வலியில் துடித்துள்ளார். இவரது சத்தம் கேட்ட அப்பகுதியில் இருந்த சிலர் உடனே அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது சம்பந்தப்பட்ட இளம் பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது, பைக்கில் இருந்து அந்த இளைஞர் கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறியுள்ளார். இதனிடையே சுயநினைவு திரும்பிய இளைஞர் ராம நாயுடுவிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, தனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் தருவதாக கூறி கழுத்தை அப்பெண் கத்தியால் வெட்டியதாக போலீசார் இளைஞர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், புஷ்பாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பெற்றோரின் வற்புறுத்தலின் காரணமாகவே நிச்சயதார்த்தத்திற்கு ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், புஷ்பாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
