"என்கிட்ட சொந்த வீடு கூட கிடையாது..".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்..ஓ இங்கதான் தங்குவாரா?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனந்திறந்திருக்கிறார்.
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார்.
இந்நிலையில் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய நேர்காணலில் பேசிய எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சொந்த வீடு கிடையாது
போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 177.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என போர்ப்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த நேர்காணலில் எலான் மஸ்க்,"எனக்கு இப்போது சொந்த இடம் கூட இல்லை, நான் உண்மையில் நண்பர்களின் இடங்களில் தங்கியிருக்கிறேன். டெஸ்லாவின் பெரும்பான்மையான பொறியியல் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்றால் அங்கே நண்பர்களின் உபரி பெட் ரூம்களை பயன்படுத்திக்கொள்வேன். தேவைக்கு ஏற்றபடி இதனை மாற்றிக்கொண்டே இருப்பேன்" என தெரிவித்தார்.
லீவ் கிடையாது
உலக அளவில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்போது உலக பணக்காரராக இருப்பதில் உள்ள சிக்கல் குறித்து பேசிய எலான் மஸ்க்,"தனிப்பட்ட நுகர்வுக்காக ஆண்டுக்கு பில்லியன் டாலர்களை செலவழித்தால் அது மிகவும் சிக்கலாக இருக்கும். என்னிடம் சொகுசுப் படகுகள் கிடையாது. ஒரே விதிவிலக்கு என்னுடைய விமானம். ஆனால், அதனை நான் பயன்படுத்துவதில்லை. எனக்கு வேலை செய்யவே நேரம் போதவில்லை" என்றார்.
2020 ஆம் ஆண்டு மே மாதம் தன்னிடம் உள்ள அனைத்து உடமைகளையும் விற்றுவிட்டதாகவும் தன்னிடம் வீடு கிடையாது எனவும் மஸ்க் டிவிட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.