ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்த முகமது ஜின்னா டவர் விவகாரம்!.. குண்டூரில் கொந்தளித்த பாஜக.. அரசு எடுத்த அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுண்டூர்: ஆந்திராவில் குடியரசு தினத்தன்று ஜின்னா டவரில் சிலர் இந்திய தேசிய கொடி ஏற்ற முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மகாத்மா காந்தி சாலையில் ஜின்னா டவர் என்ற நினைவுச்சின்னம் உள்ளது. பாகிஸ்தானின் தேசிய தந்தை என அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவின் நினைவாக இந்த ஜின்னா டவர் நிறுவப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இந்த டவர் அங்கு அமைக்கப்பட்டது.
இந்திய குடியரசு தினம் கடந்த 26-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது, இந்து வாஹினி அமைப்பை சேர்ந்த சிலர் குண்டூரில் உள்ள ஜின்னா டவரில் இந்திய தேசியக்கொடியை ஏற்ற முற்பட்டனர். பின்னர் இந்து வாஹினி அமைப்பை சேர்ந்த சிலர் ஜின்னா டவரை நோக்கி பேரணியாக வந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையின் இந்த நடவடிக்கையால் பாஜகவினர் கோபத்திற்கு ஆளாகினர். இதனைத்தொடர்ந்து வாஹினி அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டதையும் பாஜக கண்டித்தது. பின்னர், பல்வேறு குழுக்களின் வேண்டுகோளின் பேரில், ஜின்னா டவரில் மூவர்ணக் கொடியால் அலங்கரிக்கவும், தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அருகில் கம்பம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டதாக குண்டூர் மேயர் விளக்கமளித்தார். மேலும், இங்கு அனைத்து சமூகங்களை சேர்ந்த மக்கள் அமைதியாக வாழும் குண்டூரின் அமைதியான சூழலை பாஜக தலைவர்கள் கெடுக்க முயற்சிக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய ஜின்னா டவரில் குண்டூர் மாநகராட்சி சார்பில் 'தேசிய கொடி' வண்ண பெயிண்ட் பூசப்பட்டது. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேசிய கொடியின் வண்ணங்கள் அடங்கிய பெயிண்ட் ஜின்னா டவரில் பூசப்பட்டது. இது குறித்து குண்டூர் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. முகமது முஸ்தபா கூறுகையில், 'ஜின்னா டவர் அருகே அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றப்படும்' என்று தெரிவித்தார்.
முன்னதாக, குண்டூரில் உள்ள ஜின்னா கோபுரத்திற்கு மறுபெயரிடுமாறு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் அரசுக்கு ஆந்திர பிரதேச பாஜக கோரிக்கை விடுத்திருந்தது. பாஜக தேசிய செயலாளர் ஒய் சூர்ய குமார், தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜூ ஆகியோர் ஜின்னா கோபுரத்துக்கு அப்துல் கலாம் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். பாஜக தலைவர் விஷ்ணுவர்தன் ரெட்டி ஆந்திர அரசை ஜின்னா கோபுரத்தின் பெயரை மாற்றுவோம், இல்லையெனில் கட்சி தொண்டர்கள் கோபுரத்தை இடித்துவிட்டு மையத்திற்கு புதிய பெயரை ஒதுக்குவோம் என கூறியது குறிப்பிடத்தக்கது.
TNPSC தேர்வு எழுதுறீங்களா..? அப்போ மறக்காம இதை செஞ்சிடுங்க.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

மற்ற செய்திகள்
