‘ரெடியாக இருங்கள்’.. மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ‘முக்கிய’ கடிதம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விகிதம் அதிகரிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில், அதை சமாளிக்க சுகாதாரத்துறை பணியாளர்களை அதிகப்படுத்துவதும் முக்கியத்துவம் பெறுகிறது. மாநில அரசுகள் இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள், பயிற்சி மாணவர்களை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும். கொரோனால் பாதிக்கப்படும் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சாதாரண படுக்கைகளைத் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கையாக தரம் உயர்த்த அறிவுறுத்தப்படுகிறது. ஓய்வு பெற்ற மருத்துவ நிபுணர்களை காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனை வழங்க பயன்படுத்திக்கொள்ளலாம். நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.
இந்தியாவில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சதவீதம் 5 முதல் 10 என்று உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். அதனால் மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தை அடைந்தபோது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சதவிகிதம் 20 முதல் 23 சதவீதம் என்று இருந்தது. அதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் அளவுகளை மாநில அரசுகள் முறையாக கண்காணிக்க வேண்டும்’ என டாக்டர் ராஜேஷ் பூஷன் குறிப்பிட்டுள்ளார்.