இந்தியாவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கலாம்.. ஜிபோ சிஇஒ பகீர் தகவல்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரசின் புதிய திரிபான ஒமிக்ரான் வேரியன்ட் காட்டுத்தீ போல பரவிவருகிறது. நேற்று மட்டும் இந்தியா முழுவதிலும் 90 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் மருந்துப் பொருட்கள் குறித்த ஆராய்ச்சி நிறுவனமான ஜிபோ ஆர்என்டி சொல்யூஷன்ஸ் (ZIFO RnD Solutions) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜ் பிரகாஷ் இதுகுறித்துப் பேசுகையில்,”இந்தியாவில் ஒரே நாளில் 40 லட்சம் பாதிப்புகள் ஏற்படலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அச்சம் தேவையில்லை
’’ஒருநாளில் பதிவாகும் பாதிப்புகளில் 80 சதவீதத்துக்கு மேல் ஒமைக்ரான் என்றால் புதிய அலை உருவாகிவிட்டது என்பதை புரிந்துகொள்ளலாம். மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் இவை உருவாகிவிட்டது. அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவை விட நான்கு மடங்கு சிறிய நாட்டில் ஒருநாளில் 10 லட்சம் நபர்களுக்கு பாதிப்பு என்றால், இந்தியாவில் அதிகபட்சம் 40 லட்சம் நபர்களுக்கு ஒரே நாளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கெனவே இருமுறை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், ஏற்கெனவே கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது.
மற்ற வகைகளைவிட வேகமாக பரவும் அதே சமயத்தில் இந்த சுழற்சியும் வேகமாக முடியலாம். டெல்டா டெஸ்ட் மேட்ச் போல இருந்தால், ஒமைக்ரான் டி20போல முடியலாம். பலருக்கும் பாதிப்பு ஏற்படுவதன் மூலம் விரைவாக இந்த அலை ஒயலாம். தென் ஆப்ரிக்காவில் இந்த அலை உச்சத்தை தொட்டு தற்போது சரிந்து வருகிறது’’ என்று ராஜ் பிரகாஷ் கூறினார்.
அரசுக்குக் கோரிக்கை
தொடர்ந்து பேசிய ராஜ் பிரகாஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதனை அரசும் மருத்துவமனை நிர்வாகமும் வழிப்படுத்தவேண்டும் என்றார்.
மரண விகிதம் குறைவு
ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நபர்களில் ஏற்படும் மரண விகிதம் டெல்டா வேரியண்டை விட குறைவாகவே பதிவாகியுள்ளதாக தெரிவித்த ராஜ், அதற்காக அஜாக்கிரதையுடன் செயல்படக்கூடாது என எச்சரித்தார்.
ஒமிக்ரான் பரவல் வேகம் வரும் காலங்களில் அதிகரித்து மூன்றாம் அலை துவங்கும் எனத் தெரிவித்த ராஜ், மார்ச் 15 ஆம் தேதி முதல் ஒமிக்ரான் அலையின் வேகம் குறையத் தொடங்கலாம் எனத் தெரிவித்தார். மேலும், தற்போதைய சூழ்நிலையில் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் போட வாய்ப்பில்லை என்றாலும் மக்கள் அனைவரும் தயங்காமல் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என ராஜ் வலியுறுத்தினார்.
சட்டசபையில் ராஜேந்திர பாலாஜி பற்றிய பேச்சையே காணோம்.. அமைதிகாத்த அதிமுக எம்எல்ஏக்கள்.. என்ன காரணம்?

மற்ற செய்திகள்
