'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி!'.. தமிழக அரசு அறிவிப்பு! ஆனா.. மாடுபிடி வீரர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்!..
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜல்லிக்கட்டு: 300 மாடுபிடி வீரர்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம், 2 தவணை தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில்
பங்கேற்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என பலரும் கவலையில் இருந்தாலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாடுபிடி வீரர்கள் மற்றும், காளை உரிமையாளர்களும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதற்கு வெளியிட்டுள்ள வழிமுறைகளுடன் தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக மேலும் சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்கலாம். எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்கலாம். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் அளவிற்கேற்ப, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50%க்கும் மிகாமல் பார்வையாளர்கள் கலந்துகொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்படும் பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்கப்படுவர். போட்டியில் பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா இல்லை என்ற சான்று பெற்றிருக்கவேண்டும்.
நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.