'ஒரே ஒரு ஸ்னாக்ஸ் பாக்கெட்ட வச்சு, 2.25 லட்சம் ஆட்டைய போட்ட கும்பல்'... 'ஆன்லைனில் ஆர்டர்'... காத்திருந்த பேரதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைனில் ஆர்டர் செய்த 400 ரூபாய் நொறுக்குத் தீனி பாக்கெட், வரவில்லை என கஸ்டமர் கேருக்கு தொடர்பு கொண்ட தொழிலதிபர் 2.25 லட்சம் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு தற்போது அமலில் இருப்பதால் பலர் மளிகை பொருட்களை ஆன்லைனில் வாங்கி வருகிறார்கள். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மளிகை பொருட்கள் மற்றும் சில நொறுக்குத்தீனிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கு வந்து விட்ட நிலையில், ரூ.400 மதிப்புள்ள நொறுக்குத்தீனி மட்டும் வரவில்லை.
இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இது குறித்து புகார் அளிப்பதற்காக இணையத்தில் கஸ்டமர் கேர் எண்ணைத் தேடி எடுத்த தொழிலதிபர்,அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்முனையில் பேசிய நபர், தொழிலதிபரின் புகாரை தௌவாக கேட்டுள்ளார். பின்னர் உங்களது பணத்தை உங்களது கணக்கில் போடுகிறேன் என வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் அட்டையில் உள்ள எண்கள், சிவிவி எண், கைப்பேசி எண் ஆகியவற்றைத் தொழிலதிபரிடம் கேட்டு வாங்கியுள்ளார்.
பின்னர் தொழிலதிபரின் அழைப்பை மற்றொரு எண்ணுக்கு மாற்றியுள்ளார். அந்த எண்ணில் பேசிய நபர், UPI நம்பர் மற்றும் செல்போனுக்கு வந்த ஒடிபி(OTP)-யையும் கேட்டுள்ளார். தொழிலதிபரும் எந்த வித சந்தேகமும் படாமல் அந்த நபர் கேட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளார். பின்பு உங்களது வங்கிக் கணக்கில் பணம் வந்து விடும் எனக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
அதன்பின்பு இரண்டு மணி நேரம் கழித்து 4பரிவர்த்தனைகள் மூலம் ரூ.2.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்பிறகு தான் அவர் ஏமாற்றப்பட்டது தொழிலதிபருக்கு தெரியவந்தது. இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வங்கி தொடர்பான பல மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில், தொழிலதிபர் ஏமாந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.