'அப்பா உனக்கு புதுசா வேற வாங்கி தரேன்பா...' 'அதெல்லாம் முடியாது எனக்கு அந்த பந்து தான் வேணும்...' கடைசியில என்னதான் ஆச்சு..? சுவாரஸ்யமான சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 14, 2020 10:48 AM

திருச்சூர் அருகே ‘பந்து’ திருட்டு போனதாக போலீசில் ஒரு சிறுவன் புகார் அளித்தான். அந்த புகாரை அலட்சியப்படுத்தாமல் பந்தை தேடிக் கண்டுபிடித்த போலீசாரை பொதுமக்கள்  வெகுவாக பாராட்டினர்.

A boy complained to police that the ball was stolen

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த பழையனூர் போலீஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஒரு சிறுவன் பேசினான். அவன் தன்னுடைய கால்பந்து ஒன்று திருடு போய்விட்டது. அதனை கண்டுபிடித்து தரும்படி போலீசாரிடம் புகார் கூறினான். அவன் பெயர், ஊர் விவரத்தை போலீசார் கேட்டனர். திருச்சூரை சேர்ந்த அதுல் (வயது 10) என்றும், தன்னுடைய தந்தை சுதீஷ், திருச்சூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்கிறார் என்றும் கூறினான்.

மேலும் பந்து திருட்டு போனது குறித்து என்னுடைய பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் புதிய பந்து வாங்கி தருவதாகவும், திருட்டு போன பந்தை தேட முடியாது என்றும் கூறிவிட்டனர்.

ஆனால் எனக்கு திருட்டு போன பந்து தான் வேண்டும் என்று போனில் போலீசாரிடம் புகார் அளித்தேன் என்றான். இதனை அறிந்த பழையனூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையில் போலீசார் சிறுவனின் காணாமல் போன பந்தை தேடினர். அப்போது அதே ஊரை சேர்ந்த கால்பந்து விளையாடும் சில இளைஞர்கள் அந்த பந்தை எடுத்து சென்று இருப்பது தெரியவந்தது. உடனே அவர்களிடம் இருந்த சிறுவனின் பந்தை போலீசார் மீட்டனர்.

பின்னர் பழையனூர் போலீஸ் நிலையத்திற்கு சிறுவனை வரவழைத்தனர். சிறுவனிடம் பந்தை உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார். மேலும் திருட்டு போன பந்து தான் வேண்டும் என்று மன உறுதியோடு இருந்த சிறுவனை போலீசார் வெகுவாக பாராட்டினர். அதனை பார்த்து சிறுவன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். போலீஸ் நிலையத்தில் எப்போதுமே தீவிரமான வழக்குகளில் கவனம் செலுத்தும் வேளையில், சிறுவனின் வழக்கை அலட்சியம் செய்யாமல் பந்தைக் கண்டுபிடித்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags : #FOOTBALL