'38 வயது பெண்ணுடன் ஓடி வந்த இளைஞர்'... 'கொஞ்ச நேரத்துல திபு திபுவென போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த 5 ஆண்கள்'... யாருன்னு தெரிஞ்சதும் ஆடி போன போலீசார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசில நேரங்களில் திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் பார்க்கும் போது, நிஜத்தில் இதுபோல எல்லாம் எங்கப்பா நடக்கும் என நமது மனதிற்குள் தோன்றலாம். ஆனால் சில நேரங்களில் நமது நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமாக சில சம்பவங்கள் நடப்பதுண்டு. அது போல ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கம்பினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரான சந்துரு, ஒரு பெண்ணுடன் எங்களைக் காப்பாற்றுங்கள் எனக் கூறிக் கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அப்போது சந்துரு, நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகவும், தங்களுடைய காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருப்பதாகவும் அதனால் தங்கள் இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரையும் ஆசுவாசப்படுத்திய போலீசார், உங்களின் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாகவும், மேலதிகாரி வந்ததும் அவரிடம் பேசி, உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் கூறியுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து இருவரும் சற்று நிம்மதி அடைந்தார்கள். இந்நிலையில் அந்த நேரம் பார்த்து திபு திபுவென காவல் நிலையத்திற்குள் 5 பேர் நுழைந்தார்கள்.
இதைச் சற்றும் எதிர்பாராத போலீசார், நீங்கள் எல்லாம் யார் எனச் சற்று கடுமையான குரலில் கேட்டுள்ளார்கள். அப்போது அவர்கள் 5 பேரும், சந்துரு அழைத்து வந்தது தங்களுடைய மனைவி என்று கூறினார்கள். இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், அதிர்ச்சியில் சற்று நேரம் அப்படியே அமர்ந்து விட்டார்கள். இதையடுத்து அந்த பெண்ணை அழைத்து போலீசார் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ''அதாவது அவர்கள் சிக்கமகளூருவை சேர்ந்த பசவராஜ், பெங்களூருவைச் சேர்ந்த கிரண், ரமேஷ், துக்காராம் மற்றும் ஒரு வாலிபர் ஆவர்.
அவர்கள் 5 பேரையும் அந்த பெண் காதலித்து திருமணம் செய்து சிறிது காலம் குடும்பம் நடத்திவிட்டுத் தலைமறைவாகி உள்ளார். அதில் 2 பேருடன் குழந்தையும் பெற்றுள்ளார். அந்த பெண்ணின் பெயர் பிரியா என்பதையும், தனக்கு 38 வயது ஆவதையும் ஒப்புக் கொண்டார். மேலும் அவர்'கூறுகையில், ''பசவராஜ், கிரண், ரமேஷ், துக்காராம் உள்பட 5 பேரை ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், சில காலம் அவர்களுடன் குடும்பம் நடத்திவிட்டுத் தலைமறைவாகி விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது சந்துருவைத் தான் தீவிரமாகக் காதலித்ததாகவும், 6-வதாக அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியதோடு, சந்துரு உடன் தான் வாழ்வேன்'' என அடம் பிடித்தார். இதையடுத்து 22 வயது இளைஞரான சந்துருவிடம் பேசிய போலீசார், ''நீ இப்போது தான் வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறாய். அந்த 5 பேருக்கு வந்த நிலைமை உனக்கும் ஒரு நாள் வரலாம். உன் வாழ்க்கையைத் தொலைத்து விடாதே என அறிவுரை கூறியுள்ளார்கள்.
ஆனால் அதை எல்லாம் காதில் வாங்காத சந்துரு, பிரியா ஏற்கனவே 5 திருமணம் செய்திருப்பது குறித்து தனக்குக் கவலை இல்லை என்றும் அவருக்கு 38 வயது ஆவது குறித்தும் எனக்குக் கவலை இல்லை எனக் கூறியுள்ளார். பிரியாவும் சந்துரு உடன் தான் வாழ்வேன் எனக் கூறினார். அந்த நேரம் பார்த்து பிரியாவை எங்களுடன் தான் அனுப்ப வேண்டும் என மற்ற 5 பேரும் ஒப்பாரி வைத்தார்கள். இதற்கிடையே 22 வயதான சந்துருவுக்குத் தாய்-தந்தை இல்லை. அவர் தனது அக்காளின் பராமரிப்பில்தான் இருந்து வந்தார்.
இதையடுத்து போலீசார் சந்துருவின் அக்காவை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். பின்னர் சந்துருவிடம், அவருடைய அக்காள் பேசி பல அறிவுரைகளை வழங்கினார். ஆனால் சந்துரு எதற்கும் அசைவு கொடுக்கவில்லை. நடுவில் மாட்டிக் கொண்ட போலீசார் இனிமேல் அறிவுரைக்கு இடமில்லை என்பதை உணர்ந்து, முறைப்படி விவாகரத்து பெறாமல் சந்துருவைத் திருமணம் செய்து கொண்டதாகப் பிரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பிரியாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் சிக்கமகளூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.