'வெட்டுக்கிளிய மூட்டைல கொண்டு வந்தா பணம் சம்பாதிக்கலாமா?'.. வெட்டுகிளியைப் பிடித்து வியாபாரம் செய்தது எப்படி!?.. அதிகாரிகள் நெகிழ்ச்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகளை யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் அழிப்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் ஒரு எளிய யோசனையைக் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானின் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தின் ஊழியரான முகமது குர்ஷித் மற்றும் பாகிஸ்தான் வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி தொழில்நுட்பவியலாளர் ஜோஹர் அலி ஆகியோர்தான் இந்த யோசனையை வழங்கியுள்ளனர். இதன்படி வெட்டுக்கிளிகளைப் பிடித்து கோழிகளுக்கு உணவாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதைப் பற்றி குர்ஷித் பேசும்போது, "கடந்த வருடம் மே மாதம் ஏமனிலும் இது போன்ற வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெற்றது. அப்போது அந்த மக்கள் வெட்டுக்கிளிகள் பயிர்களை அழிப்பதற்கு முன்பாக அவர்கள் அதைப் பிடித்து விற்றனர். அதன் மூலம் ஈர்க்கப்பட்டுதான் பாகிஸ்தானிலும் இதே முறையைச் செயல்படுத்தலாம் எனத் திட்டமிட்டோம். வெட்டுக்கிளிகள் பகலில் மட்டுமே பறக்கின்றன. இரவு நேரங்களில் அவை மரங்கள் மற்றும் தாவரங்கள் இல்லாத திறந்த நிலத்தில் கொத்தாகத் தங்குகின்றன. சூரிய உதயம் வரும்வரை கிட்டத்தட்ட அவை அசைவில்லாமலேயே இருக்கின்றன. அந்த நேரத்தில் வெட்டுக்கிளிகளைப் பிடிப்பது எளிதான காரியம்.
அதற்காக பஞ்சாப் மாகாணத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமப் பகுதியான ஒகாரா மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தோம். அங்கு பெப்லி பஹார் வனப்பகுதியில் 3 நாள்கள் ஒரு சோதனை திட்டத்தைச் செயல்படுத்தினோம். அந்தப் பகுதியில் பிப்ரவரி மாதத்தில் வெட்டுக்கிளிகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. 'வெட்டுக்கிளிகளைப் பிடித்து பணம் சம்பாதித்து, பயிர்களைக் காப்பாற்றுங்கள்' என்ற முழக்கத்தை மக்கள் மத்தியில் அறிவித்தோம்.
ஒரு கிலோ வெட்டுக்கிளிகளுக்கு 20 ரூபாய் வரை கிடைக்கும். ஒரு இரவில் மொத்தமாக 7 டன் வெட்டுக்கிளிகள் வரை பிடிக்கலாம். விவசாயி ஒருவர் பிடித்துக் கொடுத்த வெட்டுக்கிளிகளை எங்கள் திட்டக்குழு எடைபோட்டு அருகில் உள்ள கோழித்தீவன பண்ணைக்கு விற்றது. இதனால் அந்த விவசாயிக்கு 20,000 ரூபாய் வரை பணம் கிடைத்தது.
ஒகாராவில் வெட்டுக்கிளிகளைப் பிடித்து பணம் சம்பாதிக்கும் விஷயத்தை சமூகவலைதளங்கள் மூலம் பரப்பினோம். முதலில் 10 -15 பேர் வெட்டுக்கிளிகளைப் பிடித்து வழங்கினர். மூன்றாவது நாளுக்குப் பிறகு 50-க்கும் மேற்பட்ட மக்கள் வெட்டுக்கிளிகளைப் பிடிக்கத்தொடங்கினர். வெட்டுக்கிளிகளைப் பிடிக்க விவசாயிகளுக்கு நாங்கள் உதவியும் யோசனையும் கூட வழங்கவில்லை. அவர்களே பிடித்து மூட்டையில் அடைத்துக் கொண்டுவந்தனர். நாங்கள் செய்ததெல்லாம் அந்த மூட்டையில் இருப்பது உண்மையிலேயே வெட்டுக்கிளிகளா என்பதைச் சோதனை செய்து பைகளை எடைபோட்டு, எடைக்கு ஏற்ப பணம் பெற்றுக் கொடுத்தோம். வெட்டுக்கிளிகளால் கோழிகளின் புரதச் சத்து அதிகரிக்கும். மேலும், பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி மருந்து தெளிப்பையும் நிறுத்தலாம்" எனக் கூறியுள்ளார்.