'கிணற்றை காணோம்' வடிவேலு பாணியில் செல்போன் டவரையே லவட்டிய கும்பல்
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்மதுரை: கூடல்புதூர் நகரில் ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட செல்போன் டவரை சாமர்த்தியமாக பலே கும்பல் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'கண்ணும் கண்ணும்' படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நிலத்தில் தோண்டிய கிணத்தை காணவில்லை என்று போலீசில் புகார் அளிப்பார். இதுபோன்ற ஒரு சம்பவம் தான் மதுரை நகரின் ஒரு பகுதியில் நடந்திருப்பது போலீசாரை திகைக்க வைத்துள்ளது. இங்கு காணாமல் போனது கிணறு இல்லை, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் டவர்.
மதுரை கூடல்புதூர் அமராவதி தெரு பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் ஒன்று ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இந்த டவரை சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் பராமரித்து வந்தது. கடந்த இரு தினங்களாக இப்பகுதி மக்களுக்கு சரியாக சிக்னல் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சிக்னல் பிரச்னை குறித்து அந்நிறுவனத்திற்கு மக்கள் தொடர்ந்து புகார் அளித்ததன் பேரில் அப்பகுதியில் அமைக்கப்பட்ட செல்போன் டவரை அந்நிறுவன மேலாளர் வந்து ஆய்வு செய்தார்.
அப்போது தான் அங்கு வைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது செல்போன் கோபுரம் திருடு போனது உறுதியாகியுள்ளது.
செல்போன் டவர் மாயமானது எப்படி?
கடந்த ஆண்டு ஜூன் மாதமே செல்போன் கோபுரத்தை பராமரிக்க வந்தபோது அதனை அங்கு காணவில்லை. இதுகுறித்து செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்த நில உரிமையாளரிடம் கேட்டபோது இதுகுறித்து எனக்கு தெரியாது என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அந்நிறுவனத்தின் சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பிலான செல்போன் டவரை காணவில்லை என்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் செல்போன் கோபுரம் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இரவோடு இரவாக உயரமான செல்போன் டவரை, சாமர்த்தியமாக சந்தேகம் வராதபடி திருடிச் சென்ற மர்ம கும்பல் இப்போது எங்கே உள்ளது என்பது தான் ஆச்சர்யமே.