'ஒரு பக்கம் பொது முடக்கம்'... 'தங்கத்தின் விற்பனை 37 சதவீதம் அதிகரிப்பு'... பின்னணி காரணம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 37 சதவீதம் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விற்பனை மற்றும் பயன்பாடு பொருளாதாரத்தில் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விற்பனை சரிந்தது. மேலும் தங்கத்தின் மீது அதிக முதலீடுகள் குவிந்ததால் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
சில மாதங்கள் கழித்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து தங்கம் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 37 சதவீதம் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டில், முதல் 3 மாதங்களில் 102 டன் தங்கம் விற்பனையான நிலையில், இந்தாண்டில் அது 140 டன்னாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
விலை மதிப்பின்படி பார்த்தால் தங்கம் விற்பனை 37 ஆயிரத்து 580 கோடி ரூபாயிலிருந்து 58 ஆயிரத்து 800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. தற்போதைய முதல் காலாண்டில் நகைகளின் தேவை 39 சதவீதமாகவும், உலக தங்க கவுன்சில் வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் முதலீடு, தங்க பிஸ்கட், பார்கள் தேவை 34 சதவீதமாகவும் உயர்ந்தது.
இதற்கிடையே கொரோனா பொது முடக்கத்திலிருந்து பொருளாதாரம் மீண்டதே தங்கம் விற்பனை அதிகரிக்கக் காரணம் என இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 3 மாதங்களில் உலகளவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் குறைந்ததும் தடுப்பூசி செலுத்தப்படும் பணி தீவிரமாகும் பட்சத்தில் நுகர்வோர்களின் நம்பிக்கையுடன் தங்கத்தை வாங்குவர்.
இது போன்று நடந்தால் வருகிற 3-வது மற்றும் 4-வது காலாண்டில் கடந்த ஆண்டை விடத் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.